இணையதளத்தில் எப்ஐஆர் பதிவேற்றவேண்டும் : சென்னை காவல் ஆணையருக்கு, நீதிபதி கடிதம்!
முதல் தகவல் அறிக்கையை காவல்துறை இணையதளத்தில் உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
Advertisement
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, குற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகளை, காவல் இணையதளத்தில் போலீசார் உடனே பதிவேற்றம் செய்வதில்லை எனவும், இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்களில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவதாகவும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதனையடுத்து, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், வழக்கை விரைந்து விசாரிக்க ஏதுவாக, முதல் தகவல் அறிக்கையை காவல் இணையதளத்தில் விரைந்து பதிவேற்றம் செய்யவேண்டும் எனவும், இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.