இத்தாலியில் மலிவு விலையில் வீடு : பழமையான வீடுகள் ரூ.87 மட்டுமே - சிறப்பு கட்டுரை!
இத்தாலியில் வரலாற்று சிறப்புமிக்க வீடுகள் வெறும் 80 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளன. எதற்காக இவ்வளவு மலிவான விலையில் வீடுகள் விற்கப்படுகின்றன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் கனவு. பெரும்பாலான மக்கள், தங்கள் முழு சேமிப்பையும் கொடுத்து வீடுகளை வாங்குகிறார்கள். மற்றொரு தரப்பினர் ஒரு வீட்டை வாங்கி விட்டு அதற்கான கடனை அடைக்க ஆயுள் முழுவதும் உழைக்கின்றனர். ஆனால், இத்தாலியில் மிகவும் மலிவான விலைக்கு வீடுகள் விற்கப்படுகின்றன. மலிவு விலை என்றால், வெறும் 80 ரூபாய் இருந்தால் போதும், அங்கு ஒரு வீடு வாங்கி விடலாம்.
இத்தாலியின் சிறு நகரங்களில் வாழ்ந்த உள்ளூர் மக்கள், சிறந்த வாய்ப்புகளைத் தேடி பெருநகரங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். அதனால், பல ஆண்டுகளாக குடியிருக்காமல் பாழடைந்து, கைவிடப்பட்ட வீடுகள் நிறைய உள்ளன. இத்தாலியில் இப்படி, பல கிராமங்கள் ஆட்கள் இல்லாமல் பேய் நகரங்களாக மாறி வருகின்றன.
இதனால் சிறுநகரங்கள் பொலிவை இழந்து வருகின்றன. இதற்கு தீர்வாக அங்குள்ள வீடுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அந்நகர நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இத்தாலியில் விற்கப்படும் மலிவு விலை வீடுகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்ற வீடுகளாகும். முதன்முதலாக 2019ஆம் ஆண்டு, இத்தாலியின் சம்பூகா டி சிசிலியா நகரத்தில், வீடு விற்பனை தொடங்கியது.
சிசிலியில் உள்ள சிறுநகரங்களில் உள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான பாரம்பரியம் மிக்க வீடுகள் குறைந்த விலைக்கு ஏலத்தில் விடப்படுகின்றன. இந்த கைவிடப்பட்ட வீடுகளை வெறும் 85 ரூபாய்க்கு விற்பதாக சம்பூகா நகராட்சி அறிவித்தது. இந்த அறிவிப்பால், வெளிநாட்டு மக்களும், இத்தாலியில் வீடு வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால், 2021 ஆம் ஆண்டு 170 ரூபாயாக இருந்த ஆரம்ப விலை, தற்போது 255 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிசிலியின் இந்த யுக்தியை பிற நகர நிர்வாகங்களுக்கு பின்பற்ற தொடங்கியுள்ளன. குறிப்பாக தெற்கு சிசிலியில் உள்ள பிவோனா நகராட்சி, சொத்துக்களில் முதலீடு செய்ய விரும்பும் எவருக்கும் வரி விலக்கு என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது.
இத்தகைய வீடுகள் அதிக ஏலம் எடுத்தவருக்கு விற்கப்படுகிறது. ஏலம் குறித்த முழு விவரங்களும் நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும், இத்தாலியில், ஒரு வீட்டை ஏலம் எடுப்பவர், வைப்புத் தொகையாக சுமார் 4.5 லட்சத்தை டெபாசிட் செய்ய வேண்டும். ஏலத்தில் தோற்றால் இந்தத் தொகை திருப்பித் தரப்படும். ஏலத்தில் வெற்றி பெற்றால் இந்த தொகை தக்கவைக்கப்படும்.
வீட்டை ஏலத்துக்கு எடுத்தவர், மூன்று ஆண்டுகளுக்குள் ஏலம் எடுத்த வீட்டைப் புதுப்பிக்க வேண்டும், தவறினால், வைப்புத்தொகையை இழக்க நேரிடும். எனவே வீட்டை வாங்கியவர்கள், உடனடியாக வீட்டைப் புதுப்பித்து விடுகிறார்கள்.
இந்த ஏலங்கள் மூலம் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட, உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இத்தாலியில் வீடு வாங்குகிறார்கள். இதனால், உள்ளூர் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. மேலும், உள்ளூரில் அதிகப் படியான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.
ஏலத்தின் மூலம்,இதுவரை, ஏறக்குறைய 21.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலாகி உள்ளதாக சிசிலியாவின் மேயர், தெரிவித்திருக்கிறார். இத்தாலியில் விற்பனைக்கு வரும் வீடுகள் பெரும்பாலும், நாட்டின் பாரம்பரிய அழகுடன் பல முற்றங்கள் மற்றும் இரும்பு பால்கனிகள் கொண்ட வசீகரமான அம்சங்களுடன் விளங்குகின்றன.
புதுப்பிக்கப்பட்ட வீட்டின் பால்கனியில் நின்று, ஒரு பக்கம் மலை, இன்னொரு பக்கம் கடல் என இயற்கை அழகை ரசித்தபடி ஒரு காபி குடிக்கும் அனுபவத்தைப் பெறவே , பலரும் இத்தாலியில் வீடு வாங்குகிறார்கள்