For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

சீனா வலையில் மீண்டும் சிக்கிய இலங்கை : துரோகம் செய்த அதிபர் அநுர? - சிறப்பு தொகுப்பு!

08:00 AM Jan 19, 2025 IST | Sivasubramanian P
சீனா வலையில் மீண்டும் சிக்கிய இலங்கை   துரோகம் செய்த அதிபர் அநுர    சிறப்பு தொகுப்பு

இலங்கையில் உள்ள அம்பா தோட்டையில், அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய சீனா முன் வந்துள்ளது. அதே சுத்திகரிப்பு ஆலைக்கான இந்தியா உடனான ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்ததை அடுத்து சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் பின்னணி என்ன ? இந்தியாவுக்கு எதிரான சீனாவின் வலையில் இலங்கை சிக்கி விட்டதா ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்துவந்த உள்நாட்டுப் போர் 2009 ஆம் ஆண்டில் முடிவடைந்த பிறகு, சீனா பல மில்லியன் டாலர்களை இலங்கையில் முதலீடு செய்து வருகிறது.

Advertisement

சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் உள்ள சாலைகளையும் துறைமுகங்களையும் இணைக்க சீனா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பட்டுப் பாதை என்று அழைக்கப்படும் புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சீனாவின் இந்த முயற்சியில், இந்தியப் பெருங்கடலின் வாசலாக அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், முக்கியப் பங்கை வகிக்கிறது.

மலாக்கா நீரிணைப்புக்கு அருகில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகம், 36 ஆயிரம் கப்பல்களைக் கையாளும் வசதி கொண்டதாகும். சுமார் 4,500 எண்ணெய்க் கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாகும். ஐரோப்பாவுக்குச் செல்லக்கூடிய கப்பல்களுக்கு இந்த துறைமுக பாதை சுமார் மூன்று நாட்கள் பயண நேரத்தைக் குறைக்கக்கூடியது. இதனால், எரிபொருள் தேவையும் கணிசமாகக் குறையும் என்று கூறப்படுகிறது.

Advertisement

அம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.12 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சீன நாடு இலங்கையிடம் இருந்து 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்குப் பெற்றது. இந்த மண்டலத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒட்டி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கு இலங்கை அரசு 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்தி, சீனாவுக்கு வழங்க இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது .

அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் தனது கடற்படை தளமாக சீனா பயன்படுத்தும் என்ற அச்சமும் இந்தியா. ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வந்தன. கன்னியாகுமரியில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் சீனாவின் இராணுவ கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும். எனவே இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தது.

குத்தகைக்கு விடப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் ராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட மாட்டாது என சீனாவும், இலங்கையும் திரும்ப திரும்ப சொன்னது. 2022ஆம் ஆண்டில், யுவான் வாங் 5 என்ற சீன இராணுவ ஆய்வுக் கப்பல் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த சூழலில், இலங்கையின் புதிய அதிபரான அநுர குமார திஸாநாயக்க, தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு கடந்த மாதம் வந்தார். அப்போது, இந்தியாவின் நலனுக்குத் தீமை ஏற்படும் வகையில் இலங்கையின் எந்த ஒரு பகுதியையும் பயன்படுத்த யாருக்கும் இலங்கை அனுமதி தராது என்று பிரதமர் மோடியிடம் உறுதியளித்தார்.

இந்நிலையில், அம்பா தோட்டையில், அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், 3.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய சீனா முன் வந்துள்ளது. இலங்கையின் எரிசக்தி அமைச்சகமும், சீனாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான சினோபெக் நிறுவனத்துக்கும் இடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 200,000 பேரல்கள் திறன் கொண்ட ஏற்றுமதி சார்ந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே, அம்பா தோட்டையில் அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2019 ஆம் ஆண்டு இந்திய-ஓமானி குழுவுடன் இலங்கை அரசு ஒப்பந்தம் செய்தது. பிறகு 2023ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இப்போது அம்பாந்தோட்டையில் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிக்க சீனாவை இலங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

குறிப்பாக, வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள் தனது துறைமுகங்களுக்குச் செல்வதற்கு இலங்கையின் ஓராண்டு தடை கடந்த மாதம் முடிவடைந்தது . இந்த பின்னணியில், அம்பாந்தோட்டையில் சீனாவின் மிகப் பெரிய முதலீடு பல கேள்விகளை எழுப்புகிறது. சொல்லப்போனால், சீனாவின் தந்திர வலையில் இலங்கை முழுவதுமாக மாட்டிக் கொண்டதாகவே புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Advertisement
Tags :
Advertisement