இந்தியாவில் அதிகரிக்கும் சிசேரியன் பிரசவம் - சிறப்பு தொகுப்பு!
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சிசேரியன் எனப்படும் பிரசவ விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, தெலங்கானாவில், 60 சதவீத பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடக்கின்றன என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சிசேரியன் அறுவை சிகிச்சை சி- பிரிவு எனப்படுகிறது. இது ஒரு பெரிய உயிர்காக்கும் அறுவை சிகிச்சை முறையாகும். மகப்பேறியல் மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகிறது.
இது தாய் மற்றும் குழந்தை இருவரின் உயிரையும் காப்பாற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், மருத்துவ ரீதியாக சுட்டிக்காட்டப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, உலகம் முழுவதும் சிசேரியன் மூலம் பிரசவம் வேகமாக அதிகரித்து வருகிறது.
உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்படும் சிசேரியன் பிரசவத்தின் எண்ணிக்கை 18 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இது மொத்த குழந்தை பிறப்புக்களில் சுமார் 19.1 சதவீதமாகும்.
1990ம் ஆண்டில் வெறும் 7 சதவீதமாக இருந்த சிசேரியன் பிரசவம் 2030ம் ஆண்டில் மொத்த பிரசவத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக, அதாவது 29 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இரண்டிலும், சிசேரியன் பிரசவத்தைப் பொறுத்தவரை ஒரே மாதிரியாக தான் அதிகரித்து வருகிறது.
டெல்லியில் உள்ள தி ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் ஃபார் குளோபல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 21 சதவீதக்கும் அதிகமான பிரசவங்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் நடைபெறுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்தியாவில் சிசேரியன் அறுவை சிகிச்சையின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன் 16.72 சதவீதமாக இருந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் 15-49 வயதுக்குட்பட்ட 7.2 லட்சம் பெண்களிடம், தேசிய குடும்ப சுகாதார தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மாநிலங்களுக்கு மாநிலம் சி பிரிவு பிரசவ என்ணிக்கை மாறுபடுகிறது.
சிசேரியன் அறுவை சிகிச்சை பிரசவம், ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும் மாறுபடுகின்றன என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. நாகாலாந்தில் 5.2 சதவீதமாகவும், தெலங்கானாவில் 60.7 சதவீதமாகவும் உள்ளன.
இந்தியாவில் ஐந்தில் ஒரு பங்கு பிரசவம் சிசேரியன் மூலம் செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு 5 கர்ப்பிணிப் பெண்களிலும் ஒருவருக்கு மருத்துவரீதியாக தேவைப்படாவிட்டாலும் கூட சி பிரிவு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைகள் பொது மருத்துவமனைகளில் குறைவாகவும், தனியார் மருத்துவ மனைகளில் அதிகளவிலும் சிசேரியன் அறுவை சிகிச்சை நடைபெறுகின்றன.
ஏறக்குறைய 70 சதவீத மாநிலங்களில் உள்ள ஏழைகளுடன் ஒப்பிடுகையில், சிசேரியன் பிரசவ விகிதங்கள் பணக்காரர்களிடம் குறைந்தது இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சிறந்த கல்வி, செல்வ வளர்ச்சி மற்றும் சமூக முன்மாதிரிகள் காரணமாக இந்தியாவில் தேவையே இல்லை என்றாலும் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
சாதாரண பிரசவம் பற்றிய பயம், ஒரு நல்ல நாளில் பிரசவம் செய்ய ஆசை, வலியற்ற பிரசவங்கள்ஆகிய காரணங்களால் பெண்கள் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இது கடுமையான பொது சுகாதார அபாயத்தை ஏற்படுத்துவதால், சிசேரியன் அறுவை சிகிச்சையின் தேவையை மதிப்பிடுவதற்கு சரியான கண்காணிப்பு வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் இந்த ஆய்வறிக்கை வலியுறுத்தியுள்ளது.