இந்தியாவில் தஞ்சம் அடைந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புக - வங்க தேச அரசு கோரிக்கை!
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிற்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டதுடன், போராட்டத்தின்போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்புவது தொடர்பாக வங்கதேச இடைக்கால அரசிடம் இருந்து வாய்மொழி கோரிக்கை வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த விஷயத்தில் தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளார்.