இந்தியா ஆண்டுக்கு 40 போர் விமானங்கள் தயாரிக்க இலக்கு : IAF தலைவர் உறுதி!
ஒவ்வொரு ஆண்டும் முப்பத்தைந்திலிருந்து நாற்பது ராணுவ விமானங்களை தயாரிக்க வேண்டிய அவசியமுள்ளது என்றும், இந்த இலக்கை அடைவது மிக எளிது என்றும் இந்திய விமானப்படை தளபதி ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
வெளியுறவுக் கொள்கைகள், புவிசார் அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து நடந்த நிகழ்வில், இந்திய விமானப் படை தளபதி ஏ.பி. சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியா தனது பாதுகாப்பு உற்பத்தித் திறன்களை வலுப்படுத்தி வருகிறது என்று கூறிய ஏ.பி. சிங், வெளிநாட்டு இறக்குமதிகளை விட உள்நாட்டு அமைப்புகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் விமானங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சற்று குறைந்த செயல்திறனை கொண்டிருந்தாலும், உள்நாட்டு உற்பத்தி தேசத்தின் விருப்பமான தேர்வாக உள்ளது.
உலக சந்தையில் 90 சதவீதம் அல்லது 85 சதவீதம் இந்தியா பெறுவதாக இருந்தாலும் உள்நாட்டு தயாரிப்புக்களுக்கு திரும்புவது தான், அயல்நாட்டை சார்ந்திருப்பதைத் தவிர்க்க முடியும் என்று கூறிய அவர், உள்நாட்டு உற்பத்தி ஒரே இரவில் நடக்காதென்றும் அதற்கு அதிக காலம் ஆகும் என்பதையும் இந்திய விமானப் படையின் தளபதி ஏ.பி. சிங் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், எந்தவொரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கும் இந்திய விமானப்படை முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படைகளுக்கு ஏற்ற விமான அமைப்புக்கள் தேவைப்படுவதால், நாடு, விமான உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 35 முதல் 40 இராணுவ விமானங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் தளபதி ஏ.பி. சிங் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த ஆண்டு முதல், ஆண்டுக்கு இருபத்தி நான்கு LCA Mk1A ஜெட் விமானங்களைத் தயாரிப்பதாக HAL உறுதியளித்துள்ளது என்றும் சுகோய் ரக போர் விமானங்கள் உட்பட கூடுதல் விமானங்களையும் சேர்த்து HAL நிறுவனத்தின் மொத்த ஆண்டு உற்பத்தி சுமார் முப்பது ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம், சில தனியார் நிறுவனங்கள் ஆண்டுக்கு, 12 லிருந்து 18 விமானங்களைச் உற்பத்தி செய்யும் நிலையில், ஆண்டுக்கு மொத்தம் 40 விமானங்களை தயாரிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போர்க்கால உற்பத்தியில் தன்னிறைவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த தளபதி ஏ.பி. சிங்,நீண்ட கால போரைச் சமாளிக்க கையிருப்பு மட்டுமல்ல, விரைவாக ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் திறனும் ஒரு நாட்டுக்கு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
AI போன்ற அதி நவீன தொழில்நுட்பம், வருங்கால போர் களத்தை மாற்றியமைத்து வரும் நிலையில், இந்திய விமானப் படையும், குவாண்டம் கம்ப்யூட்டிங், ஆட்டோமேஷன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவற்றை வேகமாக ஏற்றுக்கொண்டு முன்னேறுகிறது என்று தளபதி ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் அதே நேரத்தில்,இந்தியா தனது உலகளாவிய இராணுவ ஒத்துழைப்புகளையும் வளர்த்து வருகிறது.
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தி இருந்தார்.
இந்திய இராணுவ தளவாட உற்பத்தியில் அதிகரித்த தனியார் துறை ஈடுபாடு, விரிவாக்கப்பட்ட உற்பத்தி திறன் மற்றும் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என உலக அரங்கில் இந்தியா தனது நிலையை வலுப்படுத்தி உள்ளது.
ராணுவத் துறையிலும், சுய சார்பு பாரதம் என்ற இலக்கை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருகிறது. சீராக நகர்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப் பட்ட இந்திய விமானப்படையின் 92வது நிறைவு தினத்தின் கருப்பொருள் 'பாரதிய வாயுசேனா: சக்ஷம், சஷக்த் அவுர் ஆத்மநிர்பர்' என்பது குறிப்பிடத்தக்கது.