இந்திய துறவியால் வெற்றி : Steve Jobs, Mark Zuckerberg உள்ளிட்டோரை வழி நடத்திய நீம் கரோலி பாபா - சிறப்பு கட்டுரை!
வாழ்வில் வெற்றி பெற உத்வேகம் ஏற்படுத்தியவர் யார் என்று கேட்டால், (Steve Jobs) ஸ்டீவ் ஜாப்ஸ், (Mark Zuckerberg) மார்க் ஸக்கர்பர்க், (Jack Dorsey) ஜேக் டார்ஸி என சர்வதேச முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள், இந்தியாவை சேர்ந்த நீம் கரோலி பாபாவை கூறுகின்றனர். யார் இந்த நீம் கரோலி பாபா ? தங்கள் வெற்றிக்கு காரணமாக நீம் கரோலி பாபாவை பல பிரபலங்கள் சொல்வதன் ரகசியம் என்ன? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1900ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் பிறந்த லக்ஷ்மன் நாராயணன் சர்மா தீவிர ஆஞ்சநேய பக்தராக இருந்தார். ஆன்மீக வாழ்வில் ஈடுபாடு அதிகமான காரணத்தால், 1958ம் ஆண்டு திருமண வாழ்வில் இருந்து வெளியேறி முழு துறவறம் மேற்கொண்டார்.
அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே இந்த வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் நீம் கரோலி பாபா தொடர்ந்து கூறிவந்தார்.
உலகளாவிய அன்பே முக்கியம் என்றும், வெகுமதி எதிர்பார்க்காமல் தன்னலமற்ற முறையில் பிறருக்கு உதவுதலும் , தியானம் மேற்கொள்வதும் வாழ்வை சிறப்பானதாக்கும் என்றும் கூறிய நீம் கரோலி பாபா , இந்த மூன்றையும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறிவந்தார். 1973ம் ஆண்டு காலமான நீம் கரோலி பாபாவை அவரது சீடர்கள் மகராஜ் என்றே போற்றுகின்றனர்.
1970களின் நடுப்பகுதியில் தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான குழப்பத்தின் போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கைஞ்சியில் உள்ள நீம் கரோலி பாபாவின் ஆசிரமத்திற்கு ஸ்டீவ் ஜாப்ஸ் வந்திருக்கிறார். ஸ்டீவ் ஜாப்ஸ் வருவதற்கு ஓராண்டுக்கு முன்பே நீம் கரோலி பாபா இறந்து விட்டார். நீம் கரோலி பாபாவை , ஸ்டீவ் ஜாப்ஸால் பார்க்க முடியவில்லை.
ஆனாலும், ஆசிரமத்தின் அமைதியான சூழலை உள்வாங்கிக்கொண்டு பாபாவின் சீடர்களுடன் ஸ்டீவ் ஜாப்ஸ் பழகினார். இந்த அனுபவம் ஜாப்ஸுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. இந்திய ஆன்மீக அனுபவம், தெளிவு மற்றும் உத்வேகத்தை அளித்தது. இதுவே ஆப்பிளின் வடிவமைப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.
நீம் கரோலி பாபா ஆசிரமத்தில் தான் எளிமையான மற்றும் அமைதியான சூழலில் தனக்கு தெளிவு பிறந்ததாக ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிவித்துள்ளார்.
சவாலான காலங்களில் ஆன்மீக வழிகாட்டுதலைப் பெற மற்றவர்களையும் ஊக்குவிப்பதற்காக ஸ்டீவ் ஜாப்ஸ் பின்னர், பேஸ்புக் மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட முன்னணி தொழில்நுட்ப நிறுவன அதிபர்களையும் பிற துறை சார்ந்த பிரபலங்களையும் நீம் கரோலி பாபா ஆசிரமம் பற்றி பரிந்துரை செய்துள்ளார்.
ஸ்டீவ் ஜாப்ஸின் பரிந்துரையால் 2015ம் ஆண்டு மார்க் ஜுக்கர்பெர்க், நீம் கரோலி பாபாவின் ஆசிரமத்துக்கு சென்றிருக்கிறார். அந்த கால கட்டத்தில் தான், ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கின் விரைவான விரிவாக்கத்திற்காக பல்வேறு பிரச்சனைகளுடன் போராடி கொண்டிருந்தார்.
உலகத்தை இணைக்கும் ஃபேஸ்புக்கின் நோக்கம் மீதான தனது நம்பிக்கையை ஆசிரமம் தான் உண்டாக்கியது என்றும், முன்னேறுவதற்கான நம்பிக்கையையும் உறுதியையும் ஆசிரமம் தான் தமக்கு தந்தது என்றும் மார்க் ஜுக்கர்பெர்க் பின்னர் தெரிவித்திருந்தார்.
இதே போல் நீம் கரோலி பாபாவை தீவிரமாக பின்பற்றும் தொழிலதிபர்களில் டிவிட்டர் நிறுவனத்தை தொடங்கிய ஜேக் டார்ஸியும் ஒருவர்.
ஆசிரமத்துக்கு சென்றது குறித்து ஜேக் டார்ஸி எதுவும் எப்போதும் சொன்னதில்லை . ஆனாலும்,நீம் கரோலி பாபாவின் தாக்கம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். தினந்தோறும் தியானத்தில் ஈடுபடுவதற்கு நீம் கரோலி பாபாவே காரணம் என்று கூறும் ஜேக் டார்ஸி, தலைமை பதவியில் இருப்பதற்கு நீம் கரோலி பாபாவின் போதனைகளே காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ஜேக் டோர்சி போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மட்டுமல்ல, ஈபே இணை நிறுவனர் ஜெஃப்ரி ஸ்கோல், நீம் கரோலி பாபாவின் சிந்தனையால் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ், நீம் கரோலி பாபா ஆசிரமத்துக்கு வந்த பின்னர் தான் இந்து மதத்தைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2023ம் ஆண்டு ஜூலை மாதம், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா தம் மகளுடன் நீம் கரோலி ஆசிரமத்துக்குச் சென்று, ஆசீர்வாதங்களைப் பெற்றனர். மேலும், பாபாவின் ஆன்மீக மரபில் தங்களை இணைத்து கொண்டனர்.
மன அழுத்தத்தின் போது, தெளிவாகவும் அமைதியாகவும் இருக்க ஆசிரமத்தின் ஆன்மீக மரபே தனக்கு உதவியது என்பதை பல சந்தர்ப்பங்களில் விராட் கோலி குறிப்பிட்டிருக்கிறார் .
நவீன உலகில் எந்த துறை என்றாலும் வெற்றி பெற வேண்டிய நிர்பந்தம் மட்டுமின்றி, வெற்றி பெற்ற பின் அந்த வெற்றியைத் தக்க வைத்து கொள்ளவும் போராட வேண்டியிருக்கிறது. இதில், சமநிலையான வாழ்க்கையையும் அமைதியையும் மக்கள் தேடுகின்றனர்.
இதற்கு எளிய வழியை நீம் கரோலி பாபாவின் போதனைகள் காட்டுகின்றன என்பதாலேயே, சர்வதேச பிரபலங்கள் பாபாவின் ஆன்மீக மரபை பின்பற்றுகின்றனர்.