இந்திய SATCOM சந்தை : கால் பதிக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் - சிறப்பு கட்டுரை!
இந்தியாவில் சாட்டிலைட் வாயிலாக பிராட்பேண்ட் தொலை தொடர்பு சேவையை வழங்க எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. மத்திய அரசின் தரவு உள்ளூர்மயமாக்கல் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்குக் கட்டுப்படுவதாக எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நீண்ட காலமாகவே, இந்திய தொலை தொடர்பு சந்தையில் நுழைய பல வெளிநாட்டு நிறுவனங்கள் தீவிரமாக முயன்று வந்தன .
பொதுவாகவே இணையம்,கடலுக்கு அடியில் உள்ள பைபர் எனப்படும் கண்ணாடி இழைகள் வழியாகவே வழங்கப்படுகின்றன. இந்த இணைய அலைக் கற்றையை ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் அதை தங்கள் சேவையை பிராட் பேண்ட் மூலமாகவும், டவர்கள் மூலமாகவும்,வீடுகளுக்கு வழங்குகின்றன.
இந்நிலையில், செயற்கை கோள் மூலம் இணைய வசதியை,வழங்குவதற்கு டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் தனது ஸ்டார் லிங்க் நிறுவனம் மூலம் இந்தியாவில் கால் பதிக்க உள்ளது.
சுமார் 14,600 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ள ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்த செயற்கை கோள்கள் மூலம் அதிவேகமான இணைய சேவையை வழங்க முடியும்.
தற்போது உலகிலேயே அதிக செயற்கை கோள்கள் கொண்ட தனியார் நிறுவனமாக எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உள்ளது .
ஏற்கனவே, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க்,ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இத்தாலி, பிரேசில், நெதர்லாந்து, பெல்ஜியம், அயர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பலநாடுகள் ஸ்டார் லிங்க் வசதியை பெற்றுள்ளன.
இந்தியாவில் சாட்காம் எனப்படும் செயற்கைக் கோள் தொலை தொடர்பு சேவையை வழங்குவதற்கான அனுமதியை கேட்டு ஸ்டார் லிங்க் விண்ணப்பித்திருந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை செயற்கை கோள் அலைக் கற்றை ஒதுக்கீட்டை எப்போதும் போல் ஏலம் முறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி மற்றும் ஏர் டெல் சுனில் மிட்டல் ஆகியோர் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் , செயற்கை கோள் அலைக் கற்றை நிர்வாக அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இதற்கான கட்டணம் அதற்கேற்ப நிர்ணயம் செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
உலக அளவில் சாட் காம் அலை கற்றை நிர்வாக அடிப்படையில் தான் ஒதுக்கீடு செய்யப் படுகிறது மேலும், இதை சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன் கண்காணிக்கிறது.
இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் மற்றும் ஜெஃப் பெசோஸின் அமேசான் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடுமையான பாதுகாப்புத் தேவைகளை விதித்துள்ளது
மத்திய அரசின் தரவு உள்ளூர்மயமாக்கல் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்குக் கட்டுப்படுவதாக எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்திய தொலை தொடர்பு சந்தையில், நுழைவதற்கான முதல் படியை எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் தாண்டியிருக்கிறது.
மேலும், OneWeb மற்றும் SES உடனான ரிலையன்ஸ் ஜியோவின் கூட்டாண்மைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கிடையில், செயற்கைக்கோள் சேவைகளுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் விலை நிர்ணயம் செய்வதற்கான வழிமுறையை இறுதி செய்ய, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
விலை நிர்ணயம் மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு விதிகளை அரசு முடிவு செய்யும் போது தான் இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் .