For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின்? - மத்திய அமைச்சர் எல்.முருகன்

10:13 AM Nov 21, 2024 IST | Murugesan M
இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின்    மத்திய அமைச்சர் எல் முருகன்

தமிழகத்தில் மருத்துவர் மீதான தாக்குதல் எனும் அதிர்ச்சி மறையும் முன்பே அரசுப் பள்ளி ஆசிரியை படுகொலை. மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லை என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் இனியாவது விழித்துக் கொள்வாரா காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர்  விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் நுழைந்து, மருத்துவர் பாலாஜியை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அண்மையில் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் மீது நடந்த கொலை வெறி தாக்குதல் தமிழகத்தின் சட்டம்-ஒழங்கு நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

Advertisement

இதற்கு நான் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்ததுடன் தமிழகத்தில் சட்டம்- ஒழங்கு சீரழிந்து வருவதை சுட்டிக்காட்டினோம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ரமணியை மதன் என்பவர் வகுப்பறைக்குள் நுழைந்து சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞர் கொடூரமான முறையில் வெட்டி சாய்க்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் தமிழகத்தில் மக்கள் வாழும் சூழல் இல்லாத நிலையில் இருப்பதை உணர்த்துகிறது.

தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தமிழகத்தில் யாருக்கும் எந்தவித பாதுகாப்பும் இல்லை. மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர், விவசாயிகள் என எவருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பணிபுரியும் இடங்கள் கொலைக்களமாகவும், கொலையாளிகள் எளிதில் தாக்கும் இடங்களாகவும் மாறி வருகின்றன.

சட்டம்- ஒழுங்கு என்பது துளியளவும் இல்லாமல் போயுள்ளது. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்ற பெரிய கேள்வி எழுகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும், உலகில் எங்கும் இல்லாத ஆட்சி நடைபெறுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.

அதுபோலவே தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் வாய் கூசாமல் பேசுகிறார். ஆனால், தமிழகத்தில் அன்றாடம் வன்முறை சம்பவங்களும், கொலை, கொள்ளை சம்பவங்களும் நடந்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும், இது போலி திராவிட மாடல் ஆட்சி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இனியாவது அரசு நிர்வாகத்திலும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியையை கொலை செய்த நபர் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும். அதுபோலவே, வெட்டப்பட்ட வழக்கறிஞர் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசையும், காவல்துறையையும் கேட்டுக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement