இரட்டை இலை - உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி!
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Advertisement
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவின்படி தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மனுதாரர் கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அதில், அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினர் கிடையாது என தெரிவித்திருந்தார்.
மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சியின் உள் விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியாது என்றும், அந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தையே நாட அறிவுறுத்தி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.