இரும்பு பெட்டி வெடித்து வெல்டிங் கடை உரிமையாளர் பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மர்ம நபர்கள் கொடுத்த இரும்பு பெட்டி வெடித்ததில் வெல்டிங் கடை உரிமையாளர் பரிதாபமாக பலியானார்.
வடமலம்பட்டியில் ஜெய்சங்கர் என்பவர் வெல்டிங் கடை நடத்தி வந்தார். இவரது கடைக்கு வந்த இருவர், பூட்டப்பட்ட இரும்பு பெட்டி ஒன்றை கொடுத்து துளை அமைத்துத் தரும்படி கூறியுள்ளனர். இதனையடுத்து ஜெய்சங்கர் மற்றும் அவரது உதவியாளர் பிரகாஷ் ஆகியோர் இரும்புப் பெட்டியில் துளை அமைக்க முயன்றனர்.
அப்போது இரும்புப் பெட்டி பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதனையடுத்து இருவரும் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ஜெய்சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த பிரகாஷ் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டிராக்டரில் பயன்படுத்தும் இரும்பு பெட்டியில் வெடி பொருட்கள் இருந்ததால் வெடித்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், பெட்டியில் துளை அமைக்க கொடுத்த மர்ம நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.