இளங்கலை பட்டப்படிப்பு கால அவகாசத்தை மாணவர்களே தேர்வு செய்யும் திட்டம் - பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு!
இளங்கலை பட்டப்படிப்பின் கால அவகாசத்தை மாணவர்களே தேர்வு செய்யும் திட்டத்தை பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.
இளங்கலை பட்டப்படிப்புகளை முன்கூட்டியே முடிக்க "துரிதப்படுத்தப்பட்ட பட்டப்படிப்பு திட்டம்" மற்றும் "நீட்டிக்கப்பட்ட பட்டப்படிப்பு திட்டம்" என்ற 2 புதிய திட்டங்களை பல்கலைக்கழக மானிய குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டங்களின் மூலம் படிப்பின் கால அளவு அடிப்படையில் 2 புதிய வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்க பல்கலைக்கழக மானிய குழு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார், மாணவர்கள் தங்கள் கற்றல் திறனுக்கு ஏற்ப இதில் ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
துரிதப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தில் சேரும் மாணவர்களால் 4 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பை 6 அல்லது 7 செமஸ்டர்களில் முடிக்க முடியும் என தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு, நீட்டிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு தங்கள் பட்டப்படிப்புகளை முடிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த 2 புதிய திட்டங்களும் வழக்கமான பட்டப்படிப்பிற்கு சமமானது எனவும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.