இஸ்ரோ தலைவராக நியமனம் - யார் இந்த வி.நாராயணன்? - சிறப்பு தொகுப்பு!
இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணனின் பின்னணியை தற்போது பார்க்கலாம்.
Advertisement
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த வி.நாராயணன், கரக்பூா் ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்தார்.
1984ஆம் ஆண்டு இந்திய விண்வெளிஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்த அவர், கடந்த 40 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார். இஸ்ரோவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த நாராயணன், ராக்கெட் மற்றும் விண்கல புரோபல்ஷன் பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்தவராக விளங்குகிறார்.
தொடக்கத்தில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஆக்மென்டட் சேட்டிலைட் ஏவுதளம், துருவ செயற்கைக்கோள் ஏவுதளம் ஆகியவற்றில் திட உந்துவிசை பிரிவில் நாராயணன் பணியாற்றினார்.
மேலும், பிஎஸ்எல்வி சி57, ஆதித்யா எல்1, சி.இ.20 கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு, சந்திரயான் 2, சந்திரயான் 3 உள்ளிட்ட பல திட்டங்களில் அவர் முக்கிய பங்களிப்பாற்றியுள்ளார். நாராயணன் தலைமையிலான குழு, இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களுக்கு 183 திரவ உந்துவிசை திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கியுள்ளது.
உலகிலேயே 6 நாடுகளில் மட்டும்தான் காம்ப்ளக்ஸ் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கிரையோஜெனிக் அமைப்பு உள்ளது. இந்த பட்டியிலில் இந்தியாவும் இடம்பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தவர் வி.நாராயணன்.
2017ஆம் ஆண்டு முதல் 2037ம் ஆண்டு வரை இஸ்ரோவின் புரோபல்ஷன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அவர்தான் இறுதி செய்துள்ளார். விண்வெளித்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, ஐஐடி கரக்பூரின் வெள்ளிப் பதக்கம், இந்திய விண்வெளி சங்கத்தின் தங்கப்பதக்கம், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தேசிய வடிவமைப்பு விருது உள்ளிட்டவற்றை நாராயணன் பெற்றுள்ளார்.
தற்போது அவரின் பணியை பாராட்டி, இஸ்ரோவின் தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.