ஈபிள் டவரையும் மிஞ்சிய உயரத்தில் செனாப் பாலம் இந்தியா சாதனை!
உலகின் மிக உயரமான ஜம்மு காஷ்மீர் செனாப் ரயில்வே பாலத்தில் , இரயில் போக்குவரத்தின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இது இந்திய ரயில்வே துறையின் மிகப் பெரிய சாதனை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ரியாஸ் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் மேல் சுமார் 109 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம், பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விடவும் 53 மீட்டர் அதிகமான உயரம் கொண்டது.
அதுமட்டுல்ல ,சீனாவின் குய்ஸூ மாகாணத்தில் உள்ள பெய்பான்ஜியாங் நதி மீது கட்டப்பட்டுள்ள 275 மீ உயரமுடைய பாலத்தை விடவும் அதிக உயரத்தில் கட்டப்பட்ட இரயில்வே பாலம் என்ற சிறப்பையும் செனாப் இரயில்வே பாலம் பெற்றுள்ளது.
காஷ்மீரை, இந்தியாவின் பிற மாநிலங்களுடன் இணைக்கும் நோக்கத்துடன் 'ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்' திட்டத்தின் கீழ், ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி ஆகிய இடங்களுக்கு இடையே செனாப் ஆற்றின் குறுக்கே 1,178 அடி உயரத்தில், இந்த செனாப் ரயில் பாலம் கட்டும் பணி 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு, 4314 அடி நீளமுள்ள இந்த பாலத்தின் அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்து , வளைவுப்பகுதியின் கட்டுமானப் பணிகள் தொடங்கி, இரும்பு மற்றும் கான்க்ரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இரயில்வே பாலத்தின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முழுமையடைந்து விட்ட நிலையில், செனாப் இரயில்வே பாலம் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இந்த உயரமான பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் நடத்தப் பட்டது.
ஜம்மு காஷ்மீரின் உள்ள சங்கல்டானில் இருந்து ரியாசிக்கு முதல் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்திருக்கிறது என்றும், காஷ்மீருக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையிலான ரயில் இணைப்பு முழுமை பெற்றுள்ளது என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
உதம்பூர்- ஸ்ரீநகர் - பாரமுல்லா இரயில் இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியான கத்ராவில் இருந்து 111 கிலோமீட்டர் நீளத்தில் செனாப் பாலம் ஒரு முக்கிய இணைப்பாக அமைகிறது. 2009ம் ஆண்டு 118 கிலோ மீட்டர் நீளமுள்ள காசிகுண்ட்-பாரமுல்லா பகுதியில் பணிகள் தொடங்கப்பட்டன. அடுத்தடுத்த கட்டங்களில், 2013 ஆம் ஆண்டு, 18 கிமீ நீளமுள்ள பனிஹால்-காசிகுண்ட் பகுதியும், 2014ம் ஆண்டில், 25 கிமீ நீளமுள்ள உதம்பூர்-கத்ரா பகுதியிலும் பணிகளும் நிறைவடைந்தன.
38 சுரங்கங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படும் இந்த இரயில்வே திட்டத்தில், 12.25 கிலோமீட்டர் நீளமுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையும் இடம்பெற்றுள்ளது
28660 மெட்ரிக் டன் இரும்பு பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த செனாப் இரயில் பாலம், அதி தீவிர நிலநடுக்கத்தைத் தாங்கும் சக்தி கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக மாறுவதற்கு இந்த செனாப் ரயில் பாலம் உதவும் என்றும், எதிர்பார்க்கப் படுகிறது.
300 கிலோமீட்டர் தூரமுள்ள ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலை தான் ஜம்முவை இந்தியாவின் பிற பகுதிகளிடன் இணைக்கும் ஒரே தரைவழி பாதை. கடுமையான குளிர் காலத்தில் விபத்துகள் அதிகம் நடக்கும் இந்த நெடுஞ்சாலை பல மாதங்கள் மூடப்பட்டிருக்கும்.
இந்திய சிவில் இஞ்சினியரிங் பொறியியல் துறையின் அதிசயம் என்றும் , உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றும் சொல்லப்படும் இந்த செனாப் ரயில் பாலம், காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கும், காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கும் சரக்கு போக்குவரத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் ஜம்மு காஷ்மீர் மக்கள்.
அதுமட்டுமில்லாமல், இந்த செனாப் ரயில் பாலம் திட்டமானது , காஷ்மீரின் பாலா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தந்திருப்பதோடு, காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது.