ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்து வந்த பாதை....!
ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்து வந்த அரசியல் பாதையை தற்போது பார்க்கலாம்...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தில் கடந்த 1948-ம் வருடம் டிசம்பர் மாதம் 21-ம் தேதி, ஈவிகே சம்பத் - சுலோச்சனா தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
சென்னை மாநில கல்லூரியில் பொருளாதாரத்தில் பிஏ பட்டம் பெற்ற இவர், தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் அரசியலுக்கு வந்தார்.
பெரியார் பேரன் மற்றும் ஈவிகே சம்பத் மகன் என்ற அடையாளத்துடன் அரசியலில் அடியெடுத்து வைத்த இளங்கோவனுக்கு, நடிகர் சிவாஜி கணேசனின் பரிந்துரையின் பேரில், 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த நிலையில் அங்கே வெற்றி பெற்று முதன் முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார்.
பின்னர், சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணியில் சேர்ந்து 1989-ல் பவானி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சிவாஜி தனது கட்சியை விபிசிங்கின் ஜனதா தளம் கட்சியில் இணைத்தபோது, இளங்கோவன் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார்.
கடந்த 1996-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனைத்தொடர்ந்து, 1996 -ம் ஆண்டு முதல் 2001 -ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பதவி வகித்தார்.
2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோபி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றார். மேலும், மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.
பின்னர், 2009 மக்களவை தேர்தலில், ஈரோடு தொகுதியிலும், 2014 -ம் ஆண்டு திருப்பூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து 2014 -ம் ஆண்டு முதல் 2017 -ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இரண்டாவது முறையாக பதவி வகித்தார்.
கடந்த 2019 -ம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, ரவீந்திரநாத்திடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 2023-ல் திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, இத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எப்போதும் அதிரடி கருத்துக்களை தயங்காமல் வெளிப்படுத்தியதால் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு, வரலட்சுமி என்ற மனைவியும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.