For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் சந்தையை கைப்பற்றும் இந்தியா - சிறப்பு தொகுப்பு!

08:00 PM Dec 21, 2024 IST | Murugesan M
உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் சந்தையை கைப்பற்றும் இந்தியா   சிறப்பு தொகுப்பு

2030ஆம் ஆண்டிற்குள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மின்னணு உற்பத்தி இலக்கை அடையவும், உலகளாவிய மின்னணு உற்பத்தியில் 10 சதவீதத்தை கைப்பற்றவும் இந்தியா தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணுவியல் துறையில் இந்தியாவும் வேகமாக முன்னேறி வருகிறது. தற்போதைய டிஜிட்டல் உலகில் எலெக்ட்ரானிக் தயாரிப்புகள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன..

Advertisement

அன்றாட வாழ்க்கையின் எல்லா தேவைகளுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் கைகொடுத்து வருகிறது. உலக அளவில், மின்னணு சாதனங்களுக்கான தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு மின்னணு சாதனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

உலக மின்னணு சாதனங்கள் சந்தையில், பெரும் பங்கை சீனா வைத்திருந்தது. புவிசார் அரசியல் மாற்றங்களால், இத்துறையில் சீனாவின் பிடி குறைந்து வருகிறது. இந்நிலையில், சீனா நழுவ விட்ட வாய்ப்பை வியட்நாம் சரியாக பயன்படுத்தி உள்ளது.

Advertisement

வியட்நாமின் மொத்த ஏற்றுமதியில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கிட்டத்தட்ட 40 சதவீதம் ஆகும். இதனால், குறுகிய ஆண்டுகளிலேயே வியட்நாமின் ஏற்றுமதி மற்றும் தனிநபர் வருவாய் பெருமளவு வளர்ந்துள்ளது.

வியட்நாமின் டிஜிட்டல் பொருளாதாரச் சந்தை, அடுத்த ஆண்டில் 45 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில், 90 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 200 பில்லியன் அமெரிக்க டாலர் வரை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டில், வியட்நாமின் தனிநபர் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 700 அமெரிக்க டாலராக இருந்தது. இப்போது, அது, 4,500 அமெரிக்க டாலராக உள்ளது. இது இந்தியாவை விட 80 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகின் இரண்டாவது பெரிய மொபைல் ஃபோன் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது. உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் முதலீடுகள் இந்தியாவை நோக்கி திரும்பி இருக்கிறது.

எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக சிறப்பு ஊக்கத் தொகுப்பு திட்டம் (MSIPS), எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டர்கள் ( EMC ) மற்றும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) போன்ற பல திட்டங்களை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

Samsung, Apple, Xiaomi, LG, Bosch, Foxconn, Flextronics மற்றும் Wistron போன்ற முக்கிய நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி வசதிகளை நிறுவியதோடு விரிவுபடுத்தியும் வருகிறது.

நொய்டா, ஓசூர், ஸ்ரீபெரும்புதூரில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டர்கள் இயங்கி வருகின்றன. கூடுதலாக ஐந்து பெரிய மின்னணு உற்பத்திக் குழுக்கள் உருவாக்கப் படவுள்ளன. இதற்கான திட்டம், இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

மேலும்,எலக்ட்ரானிக்ஸ் துறையில் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு சராசரியாக 9 சதவீதம் உள்ள சுங்க வரியைக் குறைப்பதற்கும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவை எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக மாற்றும் இலட்சியத்துடன் செயலாற்றி வருகிறது.

2026 ஆம் ஆண்டுக்குள் 120 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை அடையவும், 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி இலக்கை அடையவும், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அடுத்த மாதம் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் போது, ​​அமெரிக்க-சீனா வர்த்தகப் போர்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 'மேட் இன் வியட்நாம்' என்பதை தாண்டி, மேக் இன் இந்தியா உலக எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement