உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாக இந்தியா மாறும்! : மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி
உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாக இந்தியா மாறும் என மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற 5-வது இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) சர்வதேச எரிசக்தி மாநாடு மற்றும் கண்காட்சியில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி பங்கேற்று உரையாற்றினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சுட்டிக் காட்டியவர், இந்தியா இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உலகின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாகவும் மாறி வருகிறது என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தற்போது தூய்மை எரிசக்தித் துறையில் உலகின் மிகவும் நம்பிக்கைக்குரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என்று ஜோஷி கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகளை பலவேறு நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் முன்முயற்சியின் கீழ், 120 நாடுகள் கையெழுத்திட்டுள்ள உலகளாவிய ஒத்துழைப்புக்கான முறையான அமைப்பாக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.
"நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், இந்தியா சுமார் 15 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்கியுள்ளது என்றும், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட 7.54 ஜிகாவாட் அளவை விட இரு மடங்காகும்" என்று கூறினார்.
புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி துறையில் இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட திறன் 214 ஜிகாவாட்டை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 14% அதிகரிப்பைக் குறிக்கிறது என்று கூறினார்.
நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு எடுத்துள்ள பல முக்கிய நடவடிக்கைகளை அவர் சுட்டிக் காட்டினார்.
2025-26 ம் ஆண்டுக்குள் 38 ஜிகாவாட் ஒட்டுமொத்த திறன் கொண்ட 50 சூரியசக்தி பூங்காக்களை அமைப்பதற்கான தற்போதைய முன்முயற்சி குறித்து அவர் குறிப்பிட்டார்.