For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உலகை வியக்க வைக்கும் இந்தியா : 55 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் என கணிப்பு - சிறப்பு கட்டுரை!

08:00 PM Dec 10, 2024 IST | Murugesan M
உலகை வியக்க வைக்கும் இந்தியா   55 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் என கணிப்பு   சிறப்பு கட்டுரை

2047ஆம் ஆண்டில், சுதந்திரம் அடைந்து 100-வது ஆண்டை கொண்டாடும் போது, ​​இந்தியா 55 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடைசியாக இந்தியா 13-14 ஆம் நூற்றாண்டில் ஒரு சிறந்த பொருளாதாரமாக இந்தியா இருந்தது. 1750 வரை ஒவ்வொரு நூற்றாண்டிலும், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கை இந்தியா கொண்டிருந்தது.

Advertisement

1947 முதல் 1991 வரையிலான சோசலிச மாதிரியைப் பின்பற்றியதன் மூலம், கிழக்கு ஆசியப் பொருளாதாரங்களில், தென் கொரியா, சிங்கப்பூர் என ஆசிய நாடுகள் அனைத்தும் வளர்ந்தபோது இந்தியா பின்தங்கி விட்டது. இப்போது தான் பிரதமர் மோடி தலைமையில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ந்து வருகிறது.

இந்தியாவின் 17வது தலைமைப் பொருளாதார ஆலோசகராக பதவி வகித்த கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்து வருகிறார். சமீபத்தில், இந்தியா @100: நாளைய பொருளாதார சக்தியை எதிர்பார்க்கிறது என்ற நூலை எழுதியுள்ளார்.

Advertisement

அந்நூலில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான தனது பார்வையை பதிவு செய்திருக்கிறார். 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 55 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறும் என்று தெரிவித்திருக்கிறார்.

1970 முதல் 1995 வரை, வியட்நாம் போர், கச்சா எண்ணெய் பிரச்சனைகள் மற்றும் அதிக பணவீக்கம் போன்ற குறிப்பிடத்தக்க சவால்கள் இருந்தன. என்றாலும் ஜப்பானின் பொருளாதாரம் கிட்டத்தட்ட 25 மடங்கு வளர்ந்தது. அதே போல், 1996 முதல் 2021வரை சீனாவின் பொருளாதாரம் 22 மடங்கு உயர்ந்தது. ஜப்பான் மற்றும் சீனாவுடன் ஒப்பிடும் போது, ​​இந்தியா 3.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் இருந்து 55 டிரில்லியன் அமெரிக்க டாலர் வரை 15 மடங்கு வளர்ச்சியை நிச்சயம் அடைய முடியும் என்று கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பணவீக்கம் 2016 முதல் 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக படிப்படியாகக் குறைந்துள்ளது, எதிர்காலத்தில் பணவீக்கம் சுமார் 1 சதவீதம் வரை குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதன் பொருள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும் இரட்டிப்பாகும் என்பதாகும். இதன் படி பார்த்தால், 2047 ஆண்டில் இந்தியா 55 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாகும்.

இந்த இலக்கை அடைவதற்கு பல துறைகளில் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படும் என்பதை ஒப்புக்கொண்டுள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், முறையான துறையில் உற்பத்தியை மேம்படுத்துவது இன்றியமையாதது என்று வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில், 12.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35 சதவீதத்தை முதலீடாக பராமரிக்க வேண்டும்.

2014 ஆம் ஆண்டுக்குப் பின், உலகளவில் மூன்றாவது பெரிய தொழில் முனைவோர் சுற்றுச்சூழல் அமைப்பாக இந்தியா உருவாகி உள்ளது. 2014ம் ஆண்டு, உலகளாவிய கண்டுபிடிப்பு தரவரிசையில் 85வது இடத்தில் இந்தியா இருந்தது. இந்த ஆண்டு, கண்டுபிடிப்பு தரவரிசை பட்டியலில் 39 வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

அதே போல், 10 ஆண்டுகளுக்கு முன் எளிதாக வணிகம் என்பதில் 140 வது இடத்தில் இந்தியா இருந்தது. இந்த ஆண்டு, 60 இடத்துக்கு முன்னேறியுள்ளது. இவை இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கான தெளிவான குறிகாட்டிகளாகும். முதலீடு மற்றும் உற்பத்தி வளர்ச்சியே ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி ஆகும்.

இந்தியாவின் இந்த அபரிதமான வளர்ச்சி அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு அற்புதமான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் என்று கணித்துள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், தங்கள் பணத்தை 15 முதல் 20 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு இனி இந்தியாவில் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அடுத்த 20 ஆண்டுகளில் இதுபோன்ற வருமானத்தை வேறு எந்தப் பொருளாதாரமும் வழங்கப் போவதில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் டாலர்களில் 12 சதவீத வளர்ச்சியுடன், சம்பள உயர்வு கிடைக்கிறது என்றால்,அதுவே இந்தியாவில் சுமார் 18 சதவீத வளர்ச்சி கிடைக்கும். அதாவது, ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் சம்பளம் இரட்டிப்பாகும். சுருக்கமாக சொல்லப் போனால், அமெரிக்காவில் எதிர்பார்ப்பதை விட இந்தியாவில் சம்பள வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். எனவே, இந்திய வங்கிக் கணக்குகளில் பணத்தைச் சேமிக்குமாறு புலம்பெயர்ந்த இந்தியர்களை கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பொது டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மாதிரியைப் பாராட்டியுள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன், இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.

Advertisement
Tags :
Advertisement