உலக இசையின் விஸ்வ குரு! : அரிய சாதனைகள் படைத்த தபேலா மேதை ஜாகீர் உசேன்!
பிரபல தபேலா இசைக் கலைஞர் உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் தனது 73 வயதில், உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். பாரம்பரியமிக்க தபேலாவை அற்புதமான தனது வாசிப்பின் மூலம் உலகத்தையே தன் வசப்படுத்திய ஜாகிர் ஹுசைன் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரபல தபேலா இசைக்கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்கா கானுக்கு மகனாக, 1951ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மும்பையில் ஜாகிர் ஹுசைன் பிறந்தார். 3 வயதிலேயே, தந்தையிடம் தபேலா வாசிக்கும் கலையைக் கற்றுக்கொண்டார். பிறவி மேதையான ஜாகிர் உசேன் 5-வது வயதிலேயே தபேலா வாசிக்கத் தொடங்கினார். பிறகு தனது 7 வயதிலேயே உஸ்தாத் ஜாகிர் உசேன் கச்சேரிகளில் தபேலா வாசித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
தனது 11 வயதில், பொது மேடையில் தபேலா வாசித்து, இசைப் பயணத்தைக் தொடங்கிய ஜாகிர் உசேன், தபேலாவுக்கு என்று ஒரு தனி அந்தஸ்தை சர்வதேச அளவில் ஏற்படுத்தி சாதனை படைத்தார்.
மும்பை செயின்ட் மைக்கேல் பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் படித்த ஜாகிர் உசேன், செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பிறகு, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஜாகிர் உசேன், இசையில் முனைவர் பட்டம் பெற்றார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
1970ம் ஆண்டு, இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்ற ஜாகிர் உசேன், தொடர்ந்து உலகம் முழுவதும் தனது இசைப் பயணத்தைக் தொடர்ந்தார். இந்தியா மற்றும் அயல்நாடுகளில் ஆண்டுக்கு சுமார் 150-க்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்திவந்தார் ஜாகிர் உசேன்.
தந்தையின் அடிச்சுவட்டில் தபேலா வாசித்தாலும், தனக்கென்று தனித்த ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி, முதல் குருவான தந்தை உஸ்தாத் அல்லா ரக்கா கானுக்குப் பெருமை சேர்த்தார் ஜாகிர் உசேன்.
நாட்டில், பாரம்பரிய தபேலா வாசிப்பில், மரபு மாறாமல், இனிய இசையை வெளிப்படுத்திய ஜாகிர் உசேன். புதிய நுட்பங்களையும் வெளிப்படுத்தி, தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்தினார்.
வேகமான விரல் அசைவுகள் மற்றும் சிக்கலான தாள அமைப்புக்களையும் சர்வ சாதாரணமாக தபேலாவில் உருவாக்கி கேட்போரைப் பிரமிக்க வைப்பதில் ஜாகிர் உசேன் தனி முத்திரை பதித்தார்.
மேற்கத்திய இசைக் கருவிகளுடனும், பிற உலக இசை வடிவங்களுடனும் இந்திய பாராம்பரிய இசையை இணைத்து, FUSION என தபேலாவின் எல்லையை ஜாகிர் உசேன் விரிவுபடுத்தினார்.
ஆங்கில கிடார் கலைஞர் ஜான் மெக்லாலின், சந்தூர் இசை கலைஞர் பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா, வயலின் கலைஞர் ஷங்கர், தாளக் கலைஞர் "விக்கு" விநாயக்ராம், ட்ரம்ஸ் சிவமணி, புல்லாங்குழல் இசை கலைஞர் ராகேஷ் சவுராஷியா ஆகியோருடன் இணைந்து 1973 ஆம் ஆண்டு, ஜாகிர் உசேன் நடத்திய ஷக்தி என்ற இசை நிகழ்ச்சி, பலரையும் வியக்க வைத்தது.
குறிப்பாக,இந்திய பாரம்பரிய இசை மற்றும் JAAZ என்ற ஆங்கில இசை இரண்டின் இணைப்பின் மூலம் ஒரு புதிய இசை அனுபவத்தை இரசிகர்களுக்கு வழங்கினார்.
1973ம் ஆண்டு, லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்டு’ என்ற முதல் இசை ஆல்பத்தை வெளியிட்டார். தொடர்ந்து, ‘மேக்கிங் மியூசிக்’ என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டார். ஹாங்காங் மற்றும் நியூஆர்லியன்ஸ் சிம்பொனி ஆகியவற்றிலும் பங்கேற்று இசையில் புதுமை படைத்திருக்கிறார். அமெரிக்க இசைக் கலைஞர் பில் லாஸ்வெல்லுடன் இணைந்து ‘தபேலா பீட் சயின்ஸ்’ என்ற பிரம்மாண்ட இசைக் குழுவை ஜாகிர் உசேன் உருவாக்கினார் .
ஜாகிர் உசேன் இசையமைத்து நடித்த ‘வானப்பிரஸ்தம்’ என்ற மலையாளத் திரைப்படம், தேசிய திரைப்பட விருது உட்பட பல சர்வதேச விருதுகளையும் பெற்றது. மேலும் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ‘ஜாகிர் அண்ட் ஹிஸ் ஃப்ரெண்ட்ஸ்’ திரைப்படமும், ‘தி ஸ்பீக்கிங் ஹேண்ட்: ஜாகிர் உசேன் அண்ட் தி ஆர்ட் ஆஃப் தி இந்தியன் டிரம் என்ற ஆவணத் திரைப் படங்கள் மிக வரவேற்பைப் பெற்றன.
2016ம் ஆண்டு, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவால் வெள்ளை மாளிகைக்கு அனைத்து நட்சத்திர கலைஞர்களுடன், இசைக் கச்சேரியில் பங்கேற்க அழைக்கப்பட்ட முதல் இந்திய இசைக்கலைஞர் என்ற பெருமையை ஜாகிர் உசேன் பெற்றார்.
1990 ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாடமி விருது , சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் ஆகியவற்றை பெற்ற ஜாகிர் உசேனுக்கு, 1999 ஆம் ஆண்டில் , யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் என்டோமென்ட் ஃபார் தி ஆர்ட்ஸ் ' நேஷனல் ஹெரிடேஜ் பெல்லோஷிப் வழங்கப்பட்டது. இது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக வழங்கப்படும் உயரிய விருதாகும்.
2018 ஆம் ஆண்டில், ரத்னா சத்ஸ்யா விருது பெற்ற ஜாகிர் உசேன், ஏழு முறை கிராமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 3 முறை கிராமி விருதுகள் வழங்கப் பட்டிருக்கிறது. 1992-ல் முதல் ‘கிராமி’ விருது பெற்றார். தாளவாத்தியப் பிரிவுக்கு முதன்முதலாக வழங்கப்பட்ட விருது இது என்பது குறிப்பிடத் தக்கது. மீண்டும் 2009-ம் ஆண்டிலும் ‘கிராமி’ விருது பெற்றார்.
குறிப்பாக, இந்த ஆண்டு 66-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில், ஒரே இரவில் 3 கோப்பைகளை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஜாகிர் உசேன் பெற்றார்.
தனது 37 வயதில் பத்மஸ்ரீ விருதை பெற்ற ஜாகிர் உசேனுக்கு , 2023 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப் பட்டது.
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக நுரையீரல் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ஜாகிர் உசேன், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்து விட்டார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.
தனது அபார திறமையாலும், இசை ஞானத்தாலும், புதுமையான அணுகுமுறையாலும்,இசை ரசிகர்களைத் தன் வசம் கட்டி போட்டிருந்த ஜாகிர் உசேன் மறைவால், இசையுலகமே வெறுமை அடைந்திருக்கிறது.
ஜாகிர் உசேன் பிறவி இசை மேதை மட்டுமல்ல- இந்திய பாரம்பரிய இசையின் அடையாளம் அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களுக்கு ஒரு உந்து சக்தி என்றே கூறலாம்.