உலக தரத்திற்கு மாறும் ரயில் நிலையங்கள் : தெலங்கானாவில் SLEEPING PODS அறிமுகம் - சிறப்பு தொகுப்பு!
ஐதராபாத்தில் உள்ள செர்னபல்லி புதிய ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் SLEEPING PODS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..
Advertisement
ஸ்லீப்பிங் பாட் (SLEEPING POD) என்பது ஓய்வெடுப்பதற்கான வசதிகளுடன் கூடிய சிறிய அறையாகும். தூங்குவதற்கு படுக்கை, தலையணை, போர்வை போன்றவற்றுடன், குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளையும் உள்ளடக்கியதாக அவை இருக்கும். ரயிலுக்காக காத்திருப்பதை தவிர்த்து, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கிக்கொள்ள,
இந்த ஸ்லீப்பிங் பாட்ஸ் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக விமான நிலையங்களில் மட்டும் காணப்படும் இந்த வசதி, தற்போது ரயில்வே நிலையங்களிலும் படிப்படியாக கொண்டுவரப்படுகிறது.
அந்த வகையில் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட செர்னபல்லி ரயில் நிலையத்தில், பயணிகள் பயன்பாட்டிற்காக நவீன வசதிகளுடன் கூடிய ஸ்லீப்பிங் பாட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ரிக்ளைனர் படுக்கைகள், ஏ.சி, சார்ஜிங் போர்ட்ஸ், வைஃபை, பாதுகாப்பான லக்கேஜ் ரேக்குகள் போன்ற பல வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
பயணிகள் இந்த ஸ்லீப்பிங் பாட்ஸை ஆன்லைன் தளங்கள் மூலமோ, ரயில் நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமோ முன்பதிவு செய்யலாம் எனவும், ஒரு மணிநேர அடிப்படையில் குறைந்த அளவிலான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில் நிலையங்களை உலக தரத்தில் உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, செர்லபல்லி ரயில் நிலையத்தில் ஸ்லீப்பிங் பாட்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் கருத்துக்களுக்கேற்ப பிற முக்கிய ரயில் நிலையங்களிலும், இத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.