நாகப்பாம்புகளை கூண்டில் அடைத்து வளர்த்த திமுக பிரமுகர் கைது!
ராமநாதபுரம் அருகே கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளை கூண்டில் அடைத்து வளர்த்து வந்த விவகாரத்தில் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவியின் கணவரும், திமுக பிரமுகருமான ராஜேந்திரன் இரண்டு கொடிய விஷமுள்ள நாகப்பாம்புகளை கூண்டில் அடைத்து வைத்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தாதனேந்தலில் அரசு உடற்பயிற்சி கூடத்தில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு 6 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள இரண்டு நாகப்பாம்புகளை கூண்டில் அடைத்துவைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், நாகப்பாம்புகளை கூண்டோடு பறிமுதல் செய்து வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
மேலும், ராஜேந்திரனை கைது செய்த வனத்துறையினர், அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கச் செய்தனர். , கூண்டோடு மீட்கப்பட்ட நாகப்பாம்புகள் பெரியகண்மாய் காட்டுப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டன.