For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

உளவுத்துறை இயக்குநர் பதவி : அமெரிக்காவின் முதல் இந்து எம்பியை நியமித்த ட்ரம்ப் - சிறப்பு கட்டுரை!

08:00 AM Nov 16, 2024 IST | Murugesan M
உளவுத்துறை இயக்குநர் பதவி   அமெரிக்காவின் முதல் இந்து எம்பியை நியமித்த ட்ரம்ப்   சிறப்பு கட்டுரை

அமெரிக்க அதிபர் தேர்தலில் தமது வெற்றிக்கு உதவிய துளசி GABBARD-ஐ தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவிக்கு தேர்வு செய்திருக்கிறார் DONALD TRUMP. யார் இந்த துளசி GABBARD? விரிவாகப் பார்க்கலாம்.

அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வென்று அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் DONALD TRUMP. 2020-ல் தோல்வி அடைந்த அவர் இம்முறை வென்றதற்கு பலர் காரணமாக இருந்தனர்.  அவர்களில் ஒருவரே துளசி GABBARD.

Advertisement

ஹவாய் மாகாணத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் 4 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட துளசி, அமெரிக்காவின் முதல் இந்து எம்.பி. என்ற பெருமையை பெற்றவர். ஆனால் அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல.

1981-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி CAROL GABBARD - MIKE GABBARD தம்பதிக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார் துளசி. அவர் சிறுமியாக இருந்த போது தாய் CAROL GABBARD இந்து மதத்தை தழுவினார். அதனால் தமது பிள்ளைகள் 5 பேருக்கும் இந்துப் பெயர்களைச் சூட்டினார். சிறுவயதில் யோகா மற்றும் தற்காப்பு கலைகளை கற்பது, பகவத் கீதை படிப்பது என்று வளர்ந்தார் துளசி.

Advertisement

2002-ஆம் ஆண்டு தமது 21-ஆவது வயதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹவாய் மாகாண தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பிறகு 2003-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் இணைந்தார். 2004-ல் ஈராக் அனுப்பப்பட்ட துளசி அங்கு ஓராண்டு ராணுவப் பணி செய்தார். பின்னர் 2012-ஆம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் ஹவாய் மாகாணத்தில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். அங்கிருந்து 4 முறை தேர்வு எம்.பி.-ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2020-ஆம் ஆண்டு ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ரேஸில் இருந்த துளசி, பிறகு பைடனுக்கு ஆதரவளித்தார். 2022-ல் ஜனநாயக கட்சியில் இருந்து விலகிய அவர், நடப்பாண்டில் குடியரசுக் கட்சியில் இணைந்தார்.

மிச்சிகனில் நடைபெற்ற கூட்டத்தில் ட்ரம்புக்கு ஆதரவாக துளசி ஆற்றிய உரை அவரை மிகவும் கவர்ந்தது. கமலா ஹாரிஸுக்கு எதிரான துருப்புச் சீட்டாக துளசியை பயன்படுத்தினார் ட்ரம்ப். பொதுக்கூட்டங்கள் மற்றும் விவாதங்களில் ஜனநாயக கட்சியையும் கமலாவையும் கடுமையாக விமர்சித்த துளசி, குடியரசுக் கட்சி மற்றும் ட்ரம்பின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் ட்ரம்புக்கு கிடைப்பதற்கும் காரணமாக இருந்தார். இப்படி பல வகையில் தமது வெற்றிக்கு உதவிய துளசியை தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவிக்கு தேர்வு செய்திருக்கிறார் DONALD TRUMP. ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் தேசிய உளவுத்துறையை திறம்பட கையாள்வார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் துளசியை ட்ரம்ப் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்ற முன்மொழிவை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த போது அதற்கு ஆதரவு தெரிவித்தவர் துளசி. அதே போல் மோடிக்கு பகவத் கீதையை பரிசாக வழங்கியவர். எம்.பி.-ஆக பதவியேற்ற போது பகவத் கீதையை கையில் வைத்திருந்தவர். இந்தியா - அமெரிக்கா என இருநாட்டு தலைவர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பதால் இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் துளசி முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
Advertisement