உஷார் மக்களே.... இந்தியாவை குறி வைக்கும் மொபைல் மால்வேர் தாக்குதல் - சிறப்பு தொகுப்பு!
சர்வதேச அளவில் மொபைல் மால்வேர் தாக்குதல்களுக்கான பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆசிய-பசிபிக் மண்டலத்தில் மொபைல் மால்வேர் தாக்குதல்களின் மையப் புள்ளியாக இந்தியா மாறியுள்ளது. இதற்கு காரணம் என்ன? மொபைல் மால்வேர் தாக்குதல்கள் இந்தியாவில் அதிகமாக நடப்பது ஏன்? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சைபர் குற்றங்கள் நடக்கும் விதத்தை மாற்றியமைத்துள்ளது. இதனால், மொபைல் மால்வேர் மற்றும் ஃபிஷிங் அச்சுறுத்தல்அதிகரித்து வருகின்றன.
உலகளாவிய கிளவுட் செக்யூரிட்டி முன்னணி நிறுவனமான Zscaler ThreatLabz , கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கடந்த மே மாதம் வரையிலான 2000 கோடிக்கும் அதிகமான அச்சுறுத்தல் தொடர்பான மொபைல் பரிவர்த்தனைகள் மற்றும் இணைய அச்சுறுத்தல்கள் அடங்கிய தரவுகளை ஆய்வு செய்துள்ளது.
ஆய்வின் முடிவுகளை, Mobile, IoT மற்றும் OT Threat Report என்னும் தலைப்பில் அறிக்கையாக சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
உலகளாவிய மொபைல் மால்வேர் தாக்குதல்களில் 28 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 27.3 சதவீதத்துடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தையும்,15.9 சதவீதத்துடன் கனடா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத் தக்கது.
ஏற்கெனவே, இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மட்டும் மொபைல் மால்வேர் மூலமாக 452 கோடி ரூபாய் திருடப்பட்டதாகவும், தலைநகர் டெல்லியில் மட்டும் இந்த வகையான மோசடிகள் மூலம் ஏற்பட்ட நிதி இழப்புகள் சுமார் 158 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இன்னொரு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
HDFC, ICICI மற்றும் Axis வங்கிகள் போன்ற இந்திய வங்கிகளின் மொபைல் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இந்த ஃபிஷிங் மோசடிகள் அதிகரித்துள்ளன. மேலும், வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கு, இத்தகைய சைபர் குற்றவாளிகள் அசல் போல் இருக்கும் போலி வங்கி இணையதளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
அதிர்ச்சி தரும் வகையில், இந்திய தபால் துறையும் மொபைல் மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளாகி உள்ளது. எஸ்எம்எஸ் செய்திகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் ஃபிஷிங் இணைய தளங்களுக்கு தள்ளப்படுவதாகவும், அந்த தளங்களில் கிரெடிட் கார்டு விவரங்களை பதிவிட சொல்வதாகவும், அதன் பிறகே மோசடிகள் நடப்பதாகவும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
சர்வதேச அளவில், கூகுள் ப்ளே ஸ்டோரில் 200க்கும் மேற்பட்ட தீங்கிழைக்கும் செயலிகள் உள்ளதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. அந்த செயலிகள் மொத்தமாக 8 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. கூடுதலாக மால்வேர் பரிவர்த்தனைகள் ஆண்டுக்கு 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.
மொபைல் மால்வேர் தாக்குதல்களில் இந்தியா ஆபத்துக்களை எதிர்கொண்டாலும், சைபர் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதில் அபார முன்னேற்றம் கண்டுள்ளது. சிறந்த இணையப் பாதுகாப்பு நடைமுறைகளும் மற்றும் மக்கள் விழிப்புணர்வும் இந்தியாவின் முன்னேற்றத்துக்குக் காரணம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மொபைல் மால்வேர், ஃபிஷிங் சவால்களை எதிர்கொள்வதில் வலுவான சட்டத்தின் அவசரத் தேவையையும் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.