எதிர்கட்சிகள் போராடுவதற்கான வாய்ப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலேசியாவின் பினாங்கு மாகாணத்தில் இரண்டு நாட்கள் உலக தமிழர்களின் வம்சாவளி மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் கொடுத்த அழைப்பின் பேரில் மலேசியா செல்வதாகவும் கூறினார்.
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய விசிக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், அண்ணா பல்கலை விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.
காவல்துறை நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிக்கு பிணை வழங்காமல் சிறையில் வைத்தே புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சிகள் போராடுவதற்கான வாய்ப்பை திமுக அரசு வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.