எளிமை...நேர்மை...உறுதி... அடல் பிகாரி வாஜ்பாய் - சிறப்பு கட்டுரை!
மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது . நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக ஆட்சி நடத்திக் காட்டிய அடல் பிகாரி வாஜ்பாயின் நூற்றாண்டும் இந்த ஆண்டு தொடங்குகிறது.
இந்திய அரசியலில் தனக்கான ஒரு இடத்தைத் தக்க வைத்திருக்கும் உன்னத தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் பள்ளி ஆசிரியரின் குடும்பத்தில் வாஜ்பாய் பிறந்தார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த இவரது தந்தை கிருஷ்ண பிகாரி வாஜ்பாய், குவாலியர் சமஸ்தானத்தில் ஆசிரியராக இருந்தார்.
1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று வாஜ்பாய் சிறை சென்றார். அதன் பின்னர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.
ஜனசங்கத்தை நிறுவிய முக்கிய தலைவர்களில் அடல் பிகாரி வாஜ்பாயும் ஒருவர். 1968 முதல் 1973 வரை ஜனசங்கத்தின் தேசியத் தலைவராகவும் அடல் பிகாரி வாஜ்பாய் இருந்து வந்தார்.
1957 ஆம் ஆண்டு 32ஆவது வயதில், பல்ராம்பூர் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடல் பிகாரி வாஜ்பாயின் அசாதாரண அரசியல் பயணத்தின் ஆரம்பம் இதுவாகும்.
நாட்டில் அவசரநிலையை இந்திரா காந்தி திணித்தபோது, பெங்களூருவில் வாஜ்பாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜனநாயகத்தின் உரத்த குரலாக அப்போது வாஜ்பாயின் குரல்தான் நாடெங்கும் ஒலித்தது.
ஓராண்டில் அனைவரையும் ஒருங்கிணைத்து, இந்திரா காந்தியை எதிர்க்கும் அளவுக்கு வாஜ்பாய் உருவாவார் என அப்போது ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. ஜனதா கட்சியின் கவர்ச்சி மிக்க நபர் வாஜ்பாய் என்றும், வாஜ்பாய் இந்தியாவின் பெருமை எனவும் அன்றைய ஊடகங்கள் எழுதின.
ஜனசங்கம் உள்ளிட்ட நான்கு கட்சிகளின் கூட்டணியான ஜனதா கட்சி 1977 தேர்தலில் இந்திரா காந்திக்குப் பெரும் தோல்வியைக் கொடுத்தன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 30 ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியின் முதல் முக்கிய தோல்வி இதுவாகும்.
542 தொகுதிகளில் மொத்தமாக 298 இடங்களில் ஜனதா கட்சி வெற்றி பெற்றாலும், அந்தக் கூட்டணியில் ஜன சங்கம் தான் 90 இடங்களைக் கைப்பற்றி முன்னணியில் இருந்தது. அப்போது அந்த வெற்றிக்குக் காரணமான வாஜ்பாய் பிரதமர் பதவி கேட்டிருந்தாலும் கிடைத்திருக்கும். ஆனால், மொரார்ஜி தேசாயைப் பிரதமராக்கி, தான் வெளியுறவுத்துறை அமைச்சரானார் வாஜ்பாய்.
ஆனால், 1979 ஆம் ஆண்டு அமைச்சர் பதவியை வாஜ்பாய் ராஜினாமா செய்த சில மாதங்களிலேயே ஜனதா கூட்டணி ஆட்சி சரிந்தது. 1980களில் ஜனதா கட்சி வீழ்ச்சியடைந்த நிலையில், ஜனசங்கத்தை புதிய எழுச்சி பெற்ற கட்சியாக மீண்டும் கட்டமைக்கத் தொடங்கியபோதுதான் பாரதிய ஜனதா கட்சி பிறந்தது. பாஜகவின் முதல் தேசியத் தலைவராக வாஜ்பாய் ஆனார்.
தனது 60 வருட அரசியல் வாழ்க்கையில், ஒன்பது முறை மக்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 3 முறை பிரதமராகவும் பதவி வகித்திருக்கிறார்.
இந்தியாவின் 10வது பிரதமராக 1996ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி முதல் முறையாக பிரதமராக பதவி ஏற்ற வாஜ்பாய், 1998ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அடுத்து, 1999ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்து வெற்றியை தன்வசமாக்கி மூன்றாவது முறையாக வாஜ்பாய் பிரதமரானார்.
இந்தியாவின் பிரதமராக 5 ஆண்டுகள் பதவி வகித்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் என்று பெருமையும் வாஜ்பாய்க்கு உண்டு. ஐநா சபையில் இந்தியில் உரையாற்றிய முதல் பிரதமரும் வாஜ்பாய் தான். நேரு மற்றும் இந்திரா காந்தியைத் தொடர்ந்து , மூன்று முறை பிரதமராகப் பதவியேற்ற சாதனை படைத்தவரும் வாஜ்பாய் தான். இப்போது பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் வளர்ச்சிக்கான உள்நாட்டு பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு சீர்திருத்தங்களை அடல் பிகாரி வாஜ்பாய் அறிமுகப்படுத்தி நாட்டை வளப்படுத்தினார். இவர் ஆட்சிக்காலத்தில் தான் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவை நோக்கித் திரும்பின.
1998ஆம் ஆண்டு மே மாதம் 11 மற்றும் 13ஆம் தேதிகளில் பொக்ரானில் ஐந்து நிலத்தடி அணு சோதனைகளை வெற்றிகரமாக செய்து இந்தியாவை அணுசக்தி நாடாக வாஜ்பாய் அறிவித்தார்.
1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி சதா-இ-சர்ஹாத் என்ற பெயரில் டெல்லியிலிருந்து லாகூருக்கு பேருந்து சேவையைத் தொடங்கி இருதரப்பு உறவை மேம்படுத்தினார். பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த இந்தியாவின் நிலத்தை 1990ஆம் ஆண்டில் கார்கில் போரில் வாஜ்பாய் மீட்டெடுத்தார்.
தனது ஆட்சிக் காலத்தில், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை என இந்தியாவின் நான்கு நகரங்களையும் இணைக்கும் தங்க நாற்கர சாலை திட்டத்தைக் கொண்டு வந்து, நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தினார். வாஜ்பாயின் புகழ் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷன் ஆகிய இந்தியாவின் உயரிய விருதுகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கிறது.
இந்து தேசியவாத அரசியலை அனைவரையும் ஏற்றுக்கொள்ள செய்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக விளங்கியவர். தனது செயல்கள் மற்றும் எண்ணங்களில் தர்மத்தைக் கடைபிடித்து வாழ்ந்தவர். எளிமையின் மறு உருவமாகத் திகழ்ந்தவர். இதன் காரணமாகவே, தனது அரசியல் பயணத்திலும், மக்கள் மனதிலும் இன்றும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.
அனைவருக்கும் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு அரசு நிர்வாகமே நல்லாட்சியாகும். மக்களை மையப்படுத்திய நிர்வாகம் நல்லாட்சியின் அடித்தளமாகும். சாதி, மதம், வர்க்கம் மற்றும் பாலின வேறுபாடின்றி அனைத்து மக்களும் தங்கள் முழுத் திறனையும் வளர்த்துக் கொள்ளக்கூடிய சூழலை வழங்குவதே நல்லாட்சியின் நோக்கமாகும். ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்காக நிர்வாகம் செய்யும் விதமே நல்லாட்சியாகும். அப்படி ஒரு நல்லாட்சி தந்த தலைவர் தான் அடல் பிகாரி வாஜ்பாய்.
அதனால் தான் வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதியை நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படும் என்று 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். பிறகு 2021 ஆம் ஆண்டிலிருந்து வாஜ்பாயின் பிறந்த தினத்தை ஒட்டி, நல்லாட்சி வார நிகழ்வுகள் தொடங்கப்பட்டன.
பாரத தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தனது வாழ்நாள் முழுவதும் ஈடுபட்ட வாஜ்பாய், பாரத அன்னைக்குச் செய்த அர்ப்பணிப்பும் சேவையும், அமிர்த காலத்திலும் நாட்டுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது.