எஸ்.ஜி சூர்யா எழுதிய வீர சாவர்க்கர் குறித்த நூல் - பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டார்!
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா எழுதிய "வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை" எனும் நூலினை பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டார்.
சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண ஞான சபாவில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் "வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை" எனும் நூலினை வெளியிட்டார். முதல் பிரதியினை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக, உணவுக்கூடங்களை திறந்தவர் சாவர்க்கர் என புகழாரம் தெரிவித்தார். மேலும், எந்த சித்தாந்தத்தை கொண்டவராக இருந்தாலும், வீர சாவர்க்கரை வெளிப்படைத் தன்மையோடு அணுக வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், சுதந்திர இந்தியாவில் சாவர்க்கரை பற்றி புத்தகங்கள் வெளியிடப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என தெரிவித்தார். மேலும், ஆங்கிலேயர்களின் தண்டனையினால் தனது பட்ட படிப்பை இழந்தவர் சாவர்க்கர் என்றும் கூறினார்.
முன்னதாக பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நாட்டிற்காக உழைத்தவர்களை மத்திய பாஜக அரசு அங்கீகாரம் செய்துகொண்டே உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். திராவிட மாடல் என்ற பெயரில் நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக மக்களின் மனதை மாற்ற முயற்சி செய்யும் இந்த காலக்கட்டத்தில் சாவர்க்கர் பற்றிய புத்தகம் தேவையானது எனவும் அவர் கூறினார்...