ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்ஸவ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டார்.
அந்த வகையில், அங்கு முதன்முறையாக எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்பட்டிருப்பதாகவும், மணிப்பூரில் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வருவதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, வடகிழக்கு மாநில கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில், டெல்லியில் மூன்று நாட்கள் நடைபெறும் அஷ்டலட்சுமி மஹோத்ஸவ் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த விற்பனை அரங்குகளை பார்வையிட்டு கைவினை கலைஞர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பின்னர், கைத்தறி நெசவாளர்களை சந்தித்து கைகுலுக்கி பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். அத்துடன் நூல் நூற்கும் விதம் தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இதையடுத்து வடகிழக்கு மாநில சிறுமி உள்ளிட்ட பெண்கள் குழுவினர் பாரம்பரிய இசையுடன் மனமுருகி பாடிய வந்தே மாதரம் தேச பக்தி பாடலை பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.
இதனிடையே, வடகிழக்கு மாநிலங்களில் வளரும் ஆலமரக் கன்றுகளை பிரதமர் மோடிக்கு சிறுவர்கள் பரிசளித்து மகிழ்ந்தனர்.