ஒரு செல்ஃபிக்கு ரூ.100 கட்டணம் : சம்பாதிக்க புது ஐடியா கண்டுபிடித்த ரஷ்ய பெண் - சிறப்பு கட்டுரை!
ரஷ்யாவைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள வரும் உள்ளூர் வாசிகளிடம், கட்டணமாக 100 ரூபாய் வசூலிப்பதாகக் கூறி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களுடன் பேசி பழகும் ஆர்வத்தில் உள்ளூர் வாசிகள் பலர், புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாமா எனக்கேட்டு அவர்களை அணுகுவதை நாம் பல சுற்றுலா தலங்களில் பார்த்திருக்க வாய்ப்புண்டு.
இதுபோன்ற அணுகுமுறைகள் சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு தொடக்கத்தில் ஒருவித மகிழ்ச்சியை கொடுத்தாலும், அதுவே நாளடைவில் அவர்களுக்கு பெரும் தொல்லையாக மாறிவிடுகிறது. அமைதியான முறையில் தங்கள் நேரத்தை செலவிட விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு இது ஒருவித சோர்வை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், வெளிநாட்டவர்கள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ள ஏஞ்சலினா என்ற ரஷ்ய பெண், அதுகுறித்த வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தற்போது கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஏஞ்சலினா, தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் உள்ளூர் வாசிகளின் வழக்கமான செல்ஃபி கோரிக்கைகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்து தனது கைப்பையில் இருந்து "ONE SELFIE 100 RUPEES" என எழுதப்பட்டிருந்த காகிதத்தை எடுத்து அனைவரிடமும் காட்டும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இப்படி செய்வதன் மூலம் செல்ஃபி கோரிக்கைகளுடன் தன்னை அணுகும் உள்ளூர் வாசிகளின் தொல்லை தீரும் எனக்கருதிய ஏஞ்சலினாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் காட்டிய காகிதத்தை பார்த்த பின்பு அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆண்கள் பலர் வரிசைகட்டி நின்றதே அதற்கு காரணம்.
புன்னகையுடன் ஏஞ்சலினாவை அணுகிய அவர்கள், 100 ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டு அருகே நின்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துச் சென்றனர். இந்நிலையில், தனது புத்தி கூர்மையால் உள்ளூர் வாசிகளிடம் இருந்து சம்பாதித்த 100 ரூபாய் நோட்டை பெருமையுடன் காண்பித்து ஏஞ்சலினா மகிழ்ச்சியடைந்த இந்த வீடியோ சமூக வலைதளத்தில் சுமார் 3 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
தனது பதிவில் "இந்தியர்கள் வெளிநாட்டவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள பணம் செலுத்துகின்றனர். இதனால் செல்ஃபிக்கு போஸ் கொடுக்க வெளிநாட்டவர்கள் சோர்வடையவேண்டிய அவசியம் இல்லை. இனி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். இந்த தீர்வு எப்படியிருக்கு?" எனவும் ஏஞ்சலினா குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகியுள்ள நிலையில், ஏஞ்சலினாவின் சிந்தனைமிக்க செயலை பலரும் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.