மண்டல - மகர விளக்கு பூஜை - சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய் ரூ. 440 கோடி!
மண்டல - மகர விளக்கு பூஜை காலத்தின்போது மட்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 440 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகர விளக்கு பூஜைக்காலம் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. பூஜைக்காலத்தின்போது நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
இந்த நிலையில், மண்டல - மகரவிளக்கு காலத்தில் 53 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ததாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு 360 கோடி ரூபாயாக இருந்த வருவாய், இந்த ஆண்டில் 440 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருவாயானது திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு கீழ் இயங்கும் ஆயிரத்து 252 கோயில்களின் செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.