'கங்குவா' திரைப்படம் மிகச்சிறந்த படைப்பு - எதிர்மறை விமர்சனங்களுக்கு நடிகை ஜோதிகா பதில்!
'கங்குவா' படக்குழுவினரின் முயற்சிகளுக்கு கைதட்டல் கிடைப்பதற்கு பதில், முதல் காட்சி முடிவதற்கு முன்பே பல எதிர்மறை விமர்சனங்கள் வந்தது வருத்தமளிப்பதாக நடிகை ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான 'கங்குவா' திரைப்படத்திற்கு, வெளியான முதல் நாளில் இருந்தே பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், அதுகுறித்து நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கருத்து தெரிவித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தான் ஜோதிகாவாகவும், சினிமா ரசிகையாகவும் மட்டுமே இந்த பதிவை எழுதுவதாகவும், சூர்யாவின் மனைவியாக அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'கங்குவா' திரைப்படம் ஒரு மிகச்சிறந்த படைப்பு என தெரிவித்துள்ள நடிகை ஜோதிகா, 3 மணி நேர படத்தில் முதல் அரை மணி நேரத்தை தவிர்த்து, மற்ற அனைத்து காட்சிகளும் இதுவரை கண்டிராத முழுமையான சினிமா அனுபவமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் குறைபாடுகள் ஒரு பகுதியாக இருக்கும் பட்சத்தில் அதிக ஒலியின் காரணமாக முதல் அரை மணி நேர படத்தில் ஏற்பட்ட குறைபாட்டை மட்டுமே வைத்து, சினிமா விமர்சகர்களும், ஊடகங்களும் எதிர்மறை விமர்சனங்களை தெரிவிப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
படத்தில் வரும் பல சிறப்பான காட்சிகளை மதிப்பாய்வு செய்வதை மறந்து 'கங்குவா' படக்குழுவினரின் முயற்சிக்கு கைதட்டல் கொடுக்காமல், முதல் காட்சி முடிவதற்கு முன்பே பல எதிர்மறை விமர்சனங்களை அளித்திருப்பது வருத்தமளிப்பதாக நடிகை ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார்.