கடந்த 10 ஆண்டுகளில் 97 புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு ஒப்புதல்!
நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 97 புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே,
தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம், நாடு முழுவதும் உள்ள 165 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள், 1590 மருந்தகங்கள் மூலம் காப்பீட்டு நபர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு சிகிச்சை, மருந்துகள் மற்றும் காயத்திற்கு கட்டு போடுதல், சிறப்பு ஆலோசனை மற்றும் மருத்துவமனையில் சேர்த்தல் போன்ற விரிவான மருத்துவ சேவையை அளித்து வருகிறது.
நாடு முழுவதும் புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை இஎஸ்ஐசி அமைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 97 புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகளை உருவாக்க இஎஸ்ஐசி ஒப்புதல் அளித்துள்ளது.
இது தவிர, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை அல்லது குறிப்பிட்ட மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கிடைக்காத பட்சத்தில், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி பயனாளிகளுக்கு கட்டணமில்லா உள்நோயாளி மருத்துவ சேவைகளை வழங்க பொது/தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் அதன் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தெரிவித்தார்.