கடனில் இருந்து மீளுமா இலங்கை? என்ன செய்ய போகிறார் அதிபர் அநுர திஸாநாயக? - சிறப்பு கட்டுரை!
225 உறுப்பினர்களைக் கொண்டஇலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் அநுர திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இருக்கும் அதிபர் அநுர திஸாநாயக்கவுக்கு இந்த வெற்றி, மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்காமல் அரசியலமைப்பு திருத்தங்களைச் செய்வதற்கும் அதிகாரம் அளித்திருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1948 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து இலங்கையில் பாரம்பரிய அரசியல் கட்சிகளே ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தன. கடந்த செப்டம்பரில் முதன்முறையாக இந்தப் போக்கை உடைத்து அநுர திஸாநாயக்க அதிபராக வெற்றி பெற்றார். அதிபராக பதவியேற்ற உடன் நாடாளுமன்றத்தையும் அவர் கலைத்தார்.
இதனை தொடர்ந்து,நாட்டின் 10 வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில், 196 இடங்கள் இலங்கையின் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் கீழ், கட்சிகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்கள் பெறும் வாக்குகளின் விகிதத்திற்கேற்ப ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 29 இடங்கள், தேசியப் பட்டியல் இடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த 29 இடங்கள்,நாடு முழுவதும் பெறும் மொத்த வாக்குகளின் விகிதத்தின்படி கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே பெற்றிருந்த அதிபர் அனுர திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு இந்த முறை தனிப்பெரும்பான்மையை காட்டிலும் கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, தேசிய மக்கள் சக்தி ஒட்டுமொத்தமாக 61.6 சதவீத வாக்குகளைப் பெற்றது. சஜித் பிரேமதாசா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 17.7 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி வெறும் 4.5 சதவீத வாக்குகளுடன் 3வது இடத்தைப் பெற்றுள்ளது. முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன முன்னணி 3.1 சதவீத வாக்குகளுடன் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சி 2.3 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.
கொரொனா தொற்றுநோய் காலத்தில்,இலங்கையில் பொருளாதார நெருக்கடி உருவானது. வெளிநாட்டில் பணிபுரியும் உறவுகளிடம் இருந்து பணம் வருவதும் நின்றது. முறையற்ற நிர்வாகத்தின் விளைவாக மக்கள் வாழ்வாதாரம் இழந்தனர்.
தொடர்ந்து 2019 உள்நாட்டு போர் காரணமாக முக்கியமான சுற்றுலாத்துறை வீழ்ச்சி அடைந்தது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைந்தது, இறக்குமதிக்கு பணம் செலுத்தவோ அல்லது அதன் நாணயமான ரூபாயை பாதுகாக்கவோ இலங்கை அரசால் முடியவில்லை.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி, நாட்டில் அரசியல் நெருக்கடிக்கு வழிவகுத்தது. மேலும், அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக கட்டாயப்படுத்தியது. அவருக்குப் பதிலாக ரணில் விக்கிரமசிங்க அதிபரானார்.
ரணில் விக்கிரம சிங்க ஆட்சி காலத்தில் பொருளாதாரம் சீரானது. பணவீக்கம் குறைக்கப்பட்டது. இலங்கை ரூபாய் மதிப்பு வலுப்பெற்றது. கூடுதலாக அந்நிய செலவாணி இருப்பு அதிகரித்தது.
ஆனாலும் சர்வதேச நிதியத்தின் நிபந்தனைகள் நடைமுறைபடுத்தப்பட்டன. அதன் விளைவாக மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்தன. தொழில்துறை மற்றும் வணிகத்துறை மீது கடுமையான புதிய வருமான வரிகள் சுமத்தப்பட்டன. இதனால், பொதுமக்களின் அதிருப்தி அதிகரித்தது. அதிபர் தேர்தலில் ரணில் தோல்வியடைந்தார்.
ஊழலில் செய்த முந்தைய மக்கள் பிரதிநிதிகளைத் தண்டிப்பதாகவும், திருடப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்களை மீட்பதாகவும் அநுர திஸாநாயக்கவின் வாக்குறுதி மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.அதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் இந்த வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.
ஏற்கெனவே ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.மக்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்தும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக அநுர திஸாநாயக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருந்தார்.
மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் அதேவேளையில், சர்வதேச கடன் பொறியில் இருந்து இலங்கையை விடுபட முடியுமா என்பது தான் அநுர திஸாநாயக்கவுக்கு முன் இருக்கும் ஒரே கேள்வி?......