கணீர் குரல் கம்பீரம் : சீர்காழி கோவிந்தராஜன் ஒரு துருவ நட்சத்திரம் - சிறப்பு தொகுப்பு!
கணீர்க் குரலால் அனைவரையும் கவர்ந்த கர்நாடக சங்கீத கலைஞர் சீர்காழி கோவிந்தராஜன். தமிழ்த் திரைவானிலும் ஒரு துருவ நட்சத்திரம். இசையுலகில் நிலைத்த புகழோடு விளங்கும் அந்த உத்தமக் கலைஞர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
ஊழிதோறும் இருக்கும் ஊர் என்ற பெருமையுடைய சீர்காழி தான், தமிழிசையின் தோற்றுவாய் நகரமாகும். 7ஆம் நூற்றாண்டில், பார்வதியம்மையிடம் ஞானப்பால் உண்ட 3 வயதான குழந்தை, திருஞான சம்பந்தராகி, தமிழையும், தமிழிசையும் மீட்டெடுத்தது.
சீர்காழி மூவர் என்று போற்றப்படும் அருணாசலக்கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மூவரும், தமிழிசைக்குச் செய்த தொண்டு அளப்பரியதாகும். இத்தனை பெருமை வாய்ந்த சீர்காழியிலிருந்து தமிழிசைக்குக் கிடைத்த இன்னொரு வரம் தான் சீர்காழி கோவிந்தராஜன்.
1933ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி சீர்காழியில், சிவசிதம்பரம்-அவையம்பாள் தம்பதியருக்குத் திருமகனாக கோவிந்தராஜன் பிறந்தார். இசை ஆர்வம்மிக்க கோவிந்தராஜன், சிறுவயதிலேயே இசைப்பள்ளியில் சேர்ந்து முறையாக சங்கீதம் கற்று கொண்டார்.
நாடகக்குழு நடத்தி வந்த சீர்காழியின் தாய் மாமன் எஸ்.பி.கிருஷ்ணன் மூலமாகவே நடிக்கும் ஆசையும் சீர்காழிக்கு ஏற்பட்டது. தேவி நாடக சபாவில் சேர்ந்து மாத சம்பளத்துக்கு நாடகத்தில் நடித்து வந்தார் சீர்காழி. பி. எஸ் .செட்டியார் என்பவர் தான் சீர்காழி கோவிந்தராஜனைத் திரையுலகுக்கு அழைத்து வந்தார்.
முதலில் மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்த சீர்காழி கோவிந்தராஜன்,1949 ஆம் ஆண்டு, சென்னை இசைக் கல்லூரியில் இசைமணி பட்டம் பெற்றார். தொடர்ந்து, சங்கீத வித்வான் பட்டமும் பெற்றார். திருப்பாம்புரம் சுவாமிநாத ஐயரிடம் கர்நாடக சங்கீதத்தை முழுமையாக கற்றுணர்ந்தார்.
நடிப்பதிலேயே ஆர்வம் காட்டிவந்த சீர்காழிக்கு, "யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் யாராலும் உன்னைப் போல் பாட முடியாது என்றும், நடிப்பை விட இசையில் கவனம் செலுத்து என்றும், சங்கீதச் சக்கரவர்த்தியான இசை அமைப்பாளர் ஜி. ராமநாதன் அறிவுறுத்தினார். அப்போது தான், இசை தான் தம் பாதை என்பதைச் சீர்காழி தீர்மானம் செய்தார்.
1954 ஆண்டு வெளியான பொன்வயல் படத்தில் இடம்பெற்ற சிரிப்புதான் வருகுதைய்யா பாடல்தான் சீர்காழி சினிமாவுக்காக பாடிய முதல் பாடலாகும். இசையோடு இணைந்த நாதமாக குரல் ஒலிக்க வேண்டும் என்ற கருத்து நிலவிய காலத்தில், தனது வெண்கலக் குரலால் அதனை மாற்றி எழுதினார் சீர்காழி கோவிந்தராஜன்.
நகைச்சுவையாகட்டும், காதலாகட்டும் ,வீரமாகட்டும் , கேலியாகட்டும், சோகமாகட்டும், தன்னம்பிக்கை ஆகட்டும்,தத்துவமாகட்டும், தேசியமாகட்டும், சீர்காழி குரலில், அவை சாகா வரம் பெற்ற பாடல்களாகி விடுகின்றன.
குறிப்பாக , உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில், 'நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' என்ற பாடல் இன்றைக்கும் பலருக்குப் புத்துணர்ச்சி தருகிற பாடலாகும்.
திரை இசையில் மட்டுமில்லாமல், ஆன்மிக இசையிலும் சீர்காழி முத்திரை பதித்திருக்கிறார். விநாயகனே வினை தீர்ப்பவனே, திருச்செந்தூரின் கடலோரத்தில், ஆறுபடை வீடுகொண்ட திருமுருகா, நீ அல்லால் தெய்வமில்லை, சின்னஞ்சிறு பெண்போலே, ஆகிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
1963 ஆம் ஆண்டு, நடராஜர் தரிசனம் என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் நந்தனராக நடித்தார். ஆனால், அந்தப் படம் வெளியாகவில்லை. பிறகு 1967ம் ஆண்டில் வெளியான கந்தன் கருணை திரைப்படத்தில், நக்கீரராக சீர்காழி நடித்திருந்தார். இதுவே சீர்காழி நடித்த முதல் படமாகும்.
இதனைத் தொடர்ந்து திருமலை தென்குமரி, அகத்தியர், ராஜராஜ சோழன், தசாவதாரம், மீனாட்சி திருவிளையாடல் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ்த் திரையுலகில் ஔவையார் என்றால் எப்படிக் கே.பி. சுந்தராம்பாள் நினைவுக்கு வருவாரோ, அதேபோன்று அகத்தியர் என்றால் சீர்காழி கோவிந்தராஜனே நினைவுக்கு வருவார்.
8000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள சீர்காழி, 1988ம் ஆண்டு, தனது 55 வயதில், மரணமடைந்தார். பக்தியும் தமிழும் இசையும் இருக்கும் வரை, சீர்காழியின் குரல் காற்றில் நிலைத்திருக்கும்.