கனடாவின் அடுத்த பிரதமர்? : இந்திய வம்சாவளியின் சந்திரா ஆர்யா போட்டி
கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதையடுத்து, பிரதமர் வேட்பாளராக இந்திய வம்சாவளியினரான லிபரல் கட்சித் தலைவர் சந்திரா ஆர்யா போட்டியிடுகிறார். யார் இந்த சந்திரா ஆர்யா ? என்ன பின்னணி ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..
ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக் காலத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளின் வன்முறைகள், இந்துக் கோயில்கள் மீது தாக்குதல் மற்றும் இந்திய மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகள், நிஜ்ஜார் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. சர்வதேச உறவுகளில் தொடங்கி உள்நாட்டு சர்ச்சைகள் வரை கனடா கடந்த ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்டது.
இதனால், சொந்த கட்சியிலேயே எதிர்ப்பும் நெருக்கடியும் எழுந்த நிலையில், பிரதமர் பதவியில் இருந்தும், கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் ஜஸ்டின் ட்ரூடோ விலகினார். இந்நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சித் தலைவர் சந்திரா ஆர்யா அறிவித்துள்ளார்.
இந்தியாவின் கர்நாடகாவில், தும்கூர் மாவட்டத்தில், சிரா தாலுகாவில் உள்ள துவார்லு கிராமத்தைச் சேர்ந்த சந்திரா ஆர்யா, தார்வாட்டில் உள்ள கர்நாடகா பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மைத் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
2006ம் ஆண்டில், கனடாவுக்குக் குடிபெயர்ந்த சந்திரா ஆர்யா, அரசியலில் நுழைவதற்கு முன்பு இந்திய -கனடா ஒட்டாவா வணிகஅமைப்பின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
2015ம் ஆண்டு, நேபியனின் புறநகர்ப் பகுதியில் இருந்து, லிபரல் கட்சி சார்பில் முதல் முறையாக கனடா நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 2019 மற்றும் 2021 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் அபார வெற்றியுடன் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச வர்த்தகத்தின் நிலைக்குழு உறுப்பினராகவும் சந்திரா ஆர்யா பணியாற்ற்றி வருகிறார்.
2022 ஆம் ஆண்டு, கனடா நாடாளுமன்றத்தில் தனது தாய் மொழியான கன்னடத்தில் உரையாற்றிய முதல் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை சந்திரா ஆர்யா பெற்றார்.
கடந்த ஜூலை, இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நீதிக்கான சீக்கியர்களின் அமைப்பைச் சேர்ந்த குர்பத்வந்த் பன்னுன், சந்திரா ஆர்யா போன்றவர்களுக்கு கனடாவில் இடமில்லை என்றும், ஆர்யாவும் மற்ற கனடா இந்துக்களும் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார்.
கனடாவில் வாழும் இந்துகளுக்கு அச்சுறுத்தல்கள் அதிகம் உள்ளது என்று கூறியுள்ள சந்திரா ஆர்யா, கனடா இந்து சமூகம் அமைதியாகவும் விழிப்புடனும் இருக்குமாறு பலமுறை வலியுறுத்தி இருக்கிறார். கூடவே, கனடாவில் வாழும் பெரும்பாலான சீக்கியர்கள் காலிஸ்தான் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
கனடாவில் இந்துக் கோயில்கள் மீதான வன்முறை தாக்குதல் குறித்து, புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங் மற்றும் லிபரல் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சந்திரா ஆர்யா மல்லுக்கு நின்று இந்துக்களுக்கு ஆதரவாக சண்டையிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
1984 இந்தியாவில் நடந்த சீக்கிய எதிர்ப்பு கலவரத்தை இனப்படுகொலை என்று முத்திரை குத்த முயற்சிக்கும் தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டை சந்திரா ஆர்யா எடுத்திருந்தார். மேலும் இந்த தீர்மானத்தை எதிர்த்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரா ஆர்யா என்பது குறிப்பிடத் தக்கது. அந்த தீர்மானம் ஆர்யாவால் தான் நிறைவேறாமல் போனது.
தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், எதிர்கால தலைமுறையினரைப் பாதுகாக்கவும், மிகவும் திறமையான அரசை வழிநடத்தவும் கனடாவின் அடுத்த பிரதமராக போட்டியிடுவதாக சந்திரா ஆர்யா கூறியுள்ளார் சந்திரா ஆர்யா. இது குறித்து, சந்திரா ஆர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2040 க்குள் ஓய்வூதிய வயதை இரண்டு ஆண்டுகள் அதிகரித்தல், குடியுரிமை அடிப்படையிலான வரி முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்தல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைத் தந்துள்ளார்.