காபி குடிக்க சரியான நேரம் எது? : ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனை என்ன? - சிறப்பு தொகுப்பு!
நாள்தோறும் புத்துணர்வுக்காக நாம் அருந்தும் காபிக்கு பல்வேறு நன்மைகள் உண்டு. ஆனால் அதை எந்த நேரத்தில் அருந்தினால் உரிய பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரியுமா? பின் வரும் செய்தித் தொகுப்பில் காணலாம்...
சாரல் மழைக்கு சாலையோரக் கடையில் ஒதுங்கும்போதும் சரி... நெடுந்தூர பயணத்தில் குளிர்ந்த காற்று வீசும்போதும் சரி... சூடா ஒரு கப் காபி குடிச்சா நல்லாயிருக்குமே என நமக்கு தோன்றுவதுண்டு.
அப்பப்போ காபி குடிக்கல்லனா நமக்கு வேலையே ஓடாதுப்பா... என அலுவலகங்களில் நம்முடன் வேலை பார்க்கும் பலர் சொல்ல கேட்டிருப்போம்.
இன்னும் சில காபி பிரியர்களோ ஒருபடி மேலே சென்று, அலாரம் வைத்ததுபோல் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை என தினசரி 7 அல்லது 8 முறை காஃபி குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். கேட்டால் அப்போதான் எனக்கு மூளையே வேலை செய்யும் என்பார்கள்.
இப்படி தோன்றும் நேரத்திற்கெல்லாம் காபி குடிப்பது உடல் நலனுக்கு நல்லதா? உரிய முறையில் ஆராய்ச்சி நடத்தி இதற்கு பதில் கண்டறிந்திருக்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
அமெரிக்காவின் துலானே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய ஒரு குழு, மக்களில் இருந்து 40 ஆயிரம் பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்க்கை முறை, உணவுமுறை மற்றும் ஆரோக்கியம் குறித்து கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தினர்.
அதில் மக்களிடம் இரு வெவ்வேறு காபி அருந்தும் முறைகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஒன்று நாள் முழுவதும் காஃபி அருந்துபவர்கள், மற்றொன்று காலை மட்டும் காபி அருந்துபவர்கள்.
ஆராய்ச்சியில் கிடைத்த பல்வேறு தகவல்கள் மற்றும் காரணிகளை கருத்தில்கொண்டு, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் காலையில் மட்டும் காபி அருந்துபவர்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு 16 சதவீதம் குறைவு என்பதையும், இதய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் 31 சதவீதம் குறைவு என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிற்பகல், மாலை மற்றும் இரவு நேரங்களில் காபி அருந்துவது, தூக்கமின்மையை ஏற்படுத்துவதுடன், உடலில் சர்காடியன் இசைவு மற்றும் மெலடோனின் ஹார்மோன்களை சீர்குலைக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இதய பாதிப்புகளுக்கு காரணிகளான ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை அதிகம் ஏற்படுத்தும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால காபி பிரியர்களே....... "உஷார்"