கலிபோர்னியா காட்டுத்தீ : வீடுகளை விட்டு வெளியேறும் பிரபலங்கள் - சிறப்பு தொகுப்பு!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீயால் இதுவரை, ஐந்து பேர் பலியாகியுள்ள நிலையில், இங்கிலாந்து இளவரசர், பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டுவிட்டு வெளியேறி உள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகும். இது, அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். லாஸ் ஏஞ்சல்ஸின் மக்கள் தொகை ஒரு கோடியாகும்.
கலிபோர்னியா மாகாணம் லாஸ் லாஸ் ஏஞ்சல்ஸில் வடகிழக்கில் காட்டுத்தீ பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காட்டுத்தீ மளமளவென அடுத்தடுத்த பகுதிகளில் பரவ தொடங்கியது.
முன்னதாக, வறண்ட காலநிலை மாற்றத்தால் கடற்காற்று காரணமாக பெரும் தீ ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஒரு சில மணிநேரத்தில் தீ வேகமாக பரவியதால், ஆயிரக்கணக்கான மக்கள் நகரை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பசிபிக் பாலிசேட்ஸ், ஈடன் மற்றும் ஹர்ஸ்ட் காடுகளில்தான் மளமளவென தீ பற்றி எரிந்தது. பசிபிக் பாலிசேட்ஸில் காலை 10 மணிக்கும், ஈட்டனில் மாலை 6 மணிக்கும், ஹர்ஸ்டில் இரவு 10 மணிக்கும் தீ ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரை பகுதியில், முதலில் பரவத் தொடங்கிய காட்டுத்தீ, கடற்கரைப் பகுதிகளில் காற்று அதிவேகமாக வீசியதால், காட்டுத்தீ விரைவில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. வெறும் 36 மணி நேரத்துக்குள் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்குத் தீ பரவி சர்வ நாசத்தை உண்டாக்கி உள்ளது. அதாவது, ஒரு நிமிடத்தில் ஐந்து கால்பந்து மைதானம் அளவிலான பரப்பளவை காட்டுத் தீ எரிக்கிறது.
பசிபிக் பாலிசேட்ஸ் பகுதி பல ஹாலிவுட் நட்சத்திரங்களின் இருப்பிடமாகும். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்வுட் தனது எக்ஸ் பக்கத்தில், தன்னால் வெளியேற முடிந்ததாகவும், தங்கள் வீடுகள் இன்னும் அங்கே இருக்கிறதா எனத் தெரியவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
லா கோஸ்டா கடற்கரையில் அமைந்துள்ள பிரபல பாடகி பாரிஸ் ஹில்டனின் மாலிபுவின் வீடு காட்டுத் தீயில் எரிந்து சாம்பலானது. தன் குடும்பத்தினருடன் அமர்ந்து, செய்திகளைப் பார்த்த அதே மாலிபு வீடு நேரலையில் எரிந்து தரைமட்டமாவதைப் பார்ப்பது துரதிரஷ்டமானது என்று தனது எக்ஸ் பக்கத்தில் வேதனையுடன் பாரிஸ் ஹில்டன் பதிவிட்டுள்ளார்.
காட்டுத்தீயால் 1000 வீடுகள், வணிக கட்டிடங்கள் மற்றும் பல கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன. எங்கும் தீ ஜுவ்லைகள் மற்றும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளன. கட்டுப்பாட்டை மீறி காட்டுத் தீ எரிவதால் பல்லாயிரக்கணக்கான மக்களை உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. சுமார் 50,000 பேர் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இங்கிலாந்து இளவரசர் ஹரி, தன் மனைவி மேகன் மற்றும் குழந்தைகளுடன், கலிபோர்னியா மாகாணத்திலுள்ள Montecito என்னுமிடத்தில் வசித்து வருகிறார்.
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து இரண்டு மணி நேரத்தில் செல்ல கூடிய தொலைவில் தான் Montecito உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் வாழும் சுமார் 70,000 பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இங்கிலாந்து இளவரசர் குடும்பமும் வெளியேற்றப் படும் என்று கூறப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸில் மின்சார வசதி முற்றிலுமாக துண்டிக்கப் பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பு, பலத்த காற்று காரணமாக பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. தீயணைப்பு துறை, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணிக்கும் பணியிலும் மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். தரைவழியாக, வான்வழியாக தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவின் பிடியில் அமெரிக்காவின் சில மாகாணங்கள் சிக்கியுள்ளன. மத்திய அமெரிக்காவின் கேன்ஸஸ் முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள நியூ ஜெர்ஸி வரையிலான மாகாணங்கள் கடுமையான பனியால் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்து அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த தீ விபத்துகளில் ஒன்றாக கூறப்படுகிறது.