கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 68 போ் உயிரிழந்தனா். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய பாஜக உள்ளிட்ட கட்சிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு உத்தரவிட்டது . சிபிசிஐடியிடம் உள்ள விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.