கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு - தமிழக அரசு மேல்முறையீடு!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு காவல்துறையே இந்த வழக்கை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிப்பதில் திமுக அரசுக்கு என்ன பயம் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தில் உரிய சட்டப் போராட்டத்தை நடத்தி 67 உயிர்களுக்கான நீதியை நிலைநாட்ட அதிமுக போராடும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.