கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு - சிபிஐ விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக போலீசாரின் விசாரணையில் எவ்வித தவறும் இல்லை என மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே கள்ளக்குறிச்சி கள்ளச்சார மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்களை நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ வசம் ஒப்படைக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.