கழிவுநீர் கலப்பதும், சேதமடைந்த சாலைகளுமே அடையாளமாக உள்ளது! : எம்எல்ஏ ஆளூர் ஷா நாவாஸ் வேதனை
குடிநீரில் கழிவுநீர் கலப்பதும், சேதமடைந்த சாலைகளுமே நாகப்பட்டினத்தின் அடையாளமாக மாறிப்போயிருப்பதாக, அத்தொகுதியின் எம்எல்ஏ ஆளூர் ஷா நாவாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ ஆளூர் ஷா நாவாஸ் பேசினார். அப்போது நாகப்பட்டினம் நகராட்சியில் உட்கட்டமைப்பு மிகவும் பழமையாக இருப்பதை பலமுறை அவையின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாக கூறினார்.
குடிநீரில் கழிவுநீர் கலப்பதும், குண்டும் குழியுமான சாலைகளுமே நாகப்பட்டினம் தொகுதியின் அடையாளமாக இருப்பதாகவும் கூறினார். ஆகையால், அவற்றை சீர்செய்து தர வேண்டும் எனவும் ஆளூர் ஷா நாவாஸ் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கடந்த ஆண்டு சாலைகள் அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
நாகப்பட்டினம் நகராட்சிக்கு கூடுதல் கவனத்தை செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக கூறிய கே.என்.நேரு, அத்தொகுதியில் சேதமடைந்த சாலைகளை நிச்சயம் சீரமைப்போம் எனவும் உறுதியளித்தார்.