தமிழக சட்டசபையில் அவமதிக்கப்பட்ட தேசிய கீதம்! : தமிழக அரசை கண்டித்த எல். முருகன்
தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதற்கு தமிழக அரசை மத்திய அமைச்சர் எல். முருகன் வன்மையாக கண்டித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இன்று தொடங்கிய தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதற்கு, தமிழக அரசிற்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையுடன் தொடங்குகின்ற சட்டப்பேரவை நிகழ்வின் போது, அனைத்து மாநிலங்களும் தேசிய கீதம் ஒலிக்கச் செய்வது இயல்பு மற்றும் நமது கடமை ஆகும். ஆனால், தமிழக சட்டப் பேரவையில் மட்டும், மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து தேசிய கீதம் அவமதிக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
தமிழக மக்களின் நலனுக்கு தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து, இதுபோன்ற தேவையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கும் இந்தப் போலி திராவிட மாடல் அரசு, தேச விரோதமாக நடந்து கொள்வது ஏற்கத்தக்கதல்ல.
மேலும், மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தேசிய கீதம் இசைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தும் அதை ஏற்க மறுத்த சபாநாயகர் திரு.அப்பாவு அவர்களின் போக்கு மிகுந்த கண்டனத்திற்கு உரியது.
சபாநாயகர் என்பவர் சட்டசபையில் பொதுவானவராகவே செயல்பட வேண்டுமே தவிர, திமுக என்ற ஒரு கட்சிக்கு ஒற்றை சார்பாளராக இயங்குவது நியாயமற்ற ஒன்றாகும். தமிழக ஆளுநர் அவர்களுடன் முரண்பட்டு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் போக்கை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.