கழிவு நீர் கலப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - தாமிரபரணி ஆற்றில் ஆய்வு செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு!
திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஆய்வு செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அதிகாரிகளை கடிந்து கொண்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
திருநெல்வேலி மக்களின் நீராதாரமாக தாமிரபரணி விளங்கும் நிலையில், ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி கைலாசபுரம் பகுதிக்கு சென்ற நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆற்றில் கழிவுநீர் கலப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், மாநகராட்சி அதிகாரிகளிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
பின்னர் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க தேவைப்படும் நிதி ஒதுக்கீடு மற்றும் கால அளவு ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு செயல் திட்டத்தை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.