கவிழ்ந்த LPG டேங்கர் லாரி, வெளியேறிய கேஸ் : 'திக் திக்' நிமிடங்கள் - சிறப்பு தொகுப்பு!
கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் LPG டேங்கர் லாரி விபத்துக்குள்ளான நிலையில், தீயணைப்புத் துறையினர் 10 மணி நேரம் போராடி எரிவாயு டேங்கரை அப்புறப்படுத்தினர். இதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து LPG எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி, உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் சென்றது. காந்திபுரம் நோக்கி லாரி திரும்பியபோது லாரியில் இருந்த ஆக்சில் துண்டாகி, LPG எரிவாயு நிரப்பப்பட்ட டேங்கர் மட்டும் பயங்கர சத்ததுடன் சாலையில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தால் டேங்கரில் இருந்து துர்நாற்றத்துடன் எரிவாயு வெளியேறத் தொடங்கியது.
டேங்கர் லாரி ஓட்டுநர் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த அவர்கள் அசம்பாவிதங்களை தவிர்க்க மேம்பால சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்தை முடக்கினர். அவ்வழியாக வந்த வாகனங்களை போலீசார் மாற்று பாதையில் திருப்பி விட்டனர். தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிவாயு வெளியேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக மேம்பாலம் அருகே உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதுடன், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர், அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்காலிகமாக எரிவாயு வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், டேங்கரை அப்புறப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 100 கிலோ எரிவாயு மட்டுமே கசிந்துள்ளதாக பாரத் பெட்ரோலியம் நிறுவன ஒப்பந்ததாரர் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து 10 மணி நேர போராட்டத்திற்கு பின் ராட்சத கிரேன்கள் உதவியுடன் எரிவாயு நிறைக்கப்பட்ட டேங்கரை தீயணைப்புத்துறையினர் அகற்றினர். பின்னர் எரிவாயு டேங்கர் மாற்று லாரியில் பொருத்தப்பட்டு, பாரத் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான குடோனிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால், பேராபத்து நீங்கிய மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.