காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் காலமானார்!
தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ். இளங்கோவன் காலமானார்.
எம்.எல்.ஏ, எம்.பி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவருடைய மகன் திருமகன் ஈவேரா திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானது. இதில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றார்.
இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீர் நெஞ்சு வலி காரணமாக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஓரிரு நாட்களில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு நல்ல உடல்நலத்துடன் எம்.எல்.ஏ பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் நவம்பர் 11ஆம் தேதி உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் நவம்பர் 27 ஆம் தேதி உடல்நிலை மபின்தங்கி இருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டு சென்றார்.
நேற்று இரவு இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு திடீர் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இளங்கோவனுக்கு மூச்சுத் திணறல், சுவாச பிரச்சனை, பேஸ்மேக்கர் என சொல்லும் இதயத்துடிப்புக்கு பவர் சப்ளை செலுத்தும் கருவியும் பொருத்தப்பட்டது.
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் சற்று முன்பு காலமானார்.