For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

"கார்,பைக் வேண்டாம், மரியாதை போதும்" - ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை - சிறப்பு தொகுப்பு!

07:00 PM Jan 08, 2025 IST | Murugesan M
 கார் பைக் வேண்டாம்  மரியாதை போதும்    ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோரிக்கை   சிறப்பு தொகுப்பு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெரிய பெரிய பரிசுப் பொருட்கள் வழங்குவதை தவிர்க்குமாறு அரசுக்கு காளை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிர்ச்சியூட்டும் காளை உரிமையாளர்களின் இந்த கோரிக்கைக்கு காரணம் என்ன? பின் வரும் செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

பண்டைய காலத்தில் ஆண்டு முழுவதும் உழவு பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் அறுவடை காலம் முடிந்து வரும் தை மாதத்தில், தங்களின் உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகையை கொண்டாட தொடங்கினர். அப்போது தங்கள் பணிச்சுமைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, சற்று இளைப்பாறும் விதமாகவே சல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டை தமிழர்கள் நடத்தினர். இதற்கான சான்றுகள் கீழடி அகழாய்விலும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Advertisement

'சல்லி' என்று அழைக்கப்படும் காசுகள் முடிந்த துணியை காளைகளின் கழுத்தில் கட்டி ஓடவிட்டு, அவற்றுடன் மல்லுகட்டி அந்த காசுகள் முடிந்த துணியை அவிழ்த்து எடுப்பவரை வெற்றியாளராக அறிவித்தனர். அதனடிப்படையில் சல்லிக்கட்டு என்று அழைக்கப்பட்ட தமிழர்களின் இந்த வீர விளையாட்டு, பின் நாட்களில் மருவி தற்போதுவரை ஜல்லிகட்டு என அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் புத்தாண்டு தொடங்கியதில் இருந்து மே மாதம் இறுதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் மதுரையிலுள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில், ஜனவரி 14, 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளே, உலக புகழ்பெற்றவையாக பார்க்கப்படுகின்றன. தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் இந்த போட்டிகளின் ஏற்பாடுகளை மேற்கொளும் மாவட்ட நிர்வாகம், அதற்கென்று வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதற்கு உட்பட்டு போட்டிகளை நடத்தி வருகிறது.

Advertisement

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் விரைவில் நடைபெறவுள்ளது. போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், அதில் பங்கேற்க காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து தீவிரமாக தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சல்லிக்கட்டு என்ற பெயரில் நடத்தப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு, தற்போது ஜல்லிக்கட்டு என பெயரளவில் மட்டும் மாறாமல், அதன் ஒட்டுமொத்த நடைமுறையுமே மாறிவிட்டதாக கவலை தெரிவிக்கின்றனர் தலைமுறை தலைமுறையாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் காளை உரிமையாளர்கள்.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளையின் திமிலை பிடித்தபடி குறிப்பிட்ட எல்லையை கடந்தாலோ, காளை துள்ளி குதிக்கும்போது 3 முறைக்கு மேல் பிடியை விடாமல் இருந்தாலோ அந்த வீரர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து துடிப்புடன் துள்ளி குதித்து தப்பும் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

இப்படி அதிக காளைகளை பிடிக்கும் வீரர் சிறந்த மாடுபிடி வீரராகவும், ரசிக்கும்படியாக வீரர்களுக்கு போக்கு காட்டி தப்பும் காளை சிறந்த காளையாகவும் விழா குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டும்.  அவர்களுக்கு அரசு சார்பில் கார், பைக் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். இதுவே இன்றைய கால ஜல்லிக்கட்டு போட்டியின் நடைமுறை.

இந்நிலையில், தமிழக அரசு கார், பைக் போன்ற பரிசுகளை கொடுத்து மக்களின் ஆசையை தூண்டுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கும் காளை உரிமையாளர்கள், வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு, ஒரு கார்ப்பரேட் விளையாட்டைப்போல் மாறிவிடக்கூடாது என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர்.  கார் வெல்வோமா அல்லது பைக் வெல்வோமா என்ற எண்ணம் மேலோங்குவதால், வீரத்தை வெளிப்படுத்துவதை மறந்து தமிழரின் பாரம்பரியத்தை தொலைத்து விட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க டோக்கன் முறை அமலுக்கு வந்ததில் இருந்து, பல வீரர்களுக்கும், காளைகளுக்கும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்படுவதாக காளை உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கார், பைக் போன்ற விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பெறுவதற்காக மட்டுமே விளையாடி, பல தலைமுறைகளாக தங்கள் முன்னோர்கள் பெற்ற அளவுக்கதிகமான மரியாதை என்ற உயர்ந்த பரிசை பெற தவறிவிட்டதாகவும் காளை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டை மீட்டெடுத்ததால் போதாது, பண்டைய தமிழர் பாரம்பரியததை மீட்டெடுப்பதும் அவசியம் என உரக்கச் சொல்லும் இவர்கள், தமிழக அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை இங்கு அழுத்தமாக பதிவு செய்துள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை.

Advertisement
Tags :
Advertisement