காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நேற்றிரவு முதல் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால், மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக தென்காசி, குற்றாலம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவ, மாணவியர் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர்.
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மிதமான சாரல் மழை பெய்து வருவதுடன் பனிமூட்டமும் நிலவி வருகிறது. பூம்பாறை, மன்னவனூர், தாண்டிக்குடி, பண்ணக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும், வெள்ளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.
திருப்பதி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். கோவில் முன்பகுதியில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மலை பாதைகளில் நிலச்சரிவபாறை சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், தேவஸ்தான நிர்வாகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.