கால்வாயில் விழுந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை! - உறவினர்கள் சாலை மறியல்!
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்கும்போது தவறி விழுந்த சகோதரர்கள் 3 பேர் மாயமான நிலையில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியில் வசித்து வரும் கணேசன் என்பவரது மகன்கள் லோகேஷ், விக்ரம், சூர்யா ஆகியோர் மரக்காணம் - திண்டிவனம் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று தூண்டில் போட்டு மீன் பிடித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக லோகேஷ் தவறி பக்கிங்காம் கால்வாயில் விழுந்துள்ளார். இந்த கால்வாயில் ஃபெஞ்சல் புயலின் பொழுது பெய்த கனமழையில் இருந்தே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன் காரணமாக லோகேஷ் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக தம்பிகள் இருவரும் கால்வாயில் குதித்துள்ளனர். இதையடுத்து மூன்று பேரும் மூழ்கி மாயமான நிலையில், ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மூவரும் கால்வாயில் விழுந்தது குறித்து புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக புதுச்சேரி - சென்னை சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.