கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வரலாறு காணாத கனமழையால், அப்பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போச்சம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் கரைபுரண்டோடியதால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
போச்சம்பள்ளி காவல் நிலையம், நீதிமன்றம், வணிக வளாகங்கள், பள்ளிகள் என அனைத்து இடங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. அதேபோல, ரவுண்டானா நான்கு முனை சந்திப்பு, மழைநீரால் சூழப்பட்டு தீவு போல் காட்சியளிப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தொடர் மழையால் போச்சம்பள்ளியை சுற்றியுள்ள கிராம பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களை, மீட்டு உரிய நிவாரண உதவிகளை வழங்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.