குப்பை கிடங்கிற்கு கீழ் சிவன் கோயில்? : வழிபாடு நடத்த குவியும் பக்தர்கள் - சிறப்பு தொகுப்பு!
பாட்னாவில் குப்பை கிடங்காக கருதப்பட்ட ஒரு இடத்திற்கு அடியில், 500 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்...
பிகார் தலைநகரான பாட்னாவில் உள்ள 54-வது வார்டில், 500 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பக்தி பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
குப்பை கிடங்காக கருதப்பட்ட இடத்திற்கு அடியில் கோயில் இருப்பது தெரிய வந்ததால், அப்பகுதி மக்களே அவ்விடத்தை சுத்தப்படுத்தும் பணிகளில் உடனடியாக இறங்கினர். அங்கிருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தபோது, பல நூற்றாண்டுகள் பழமையான சிவ லிங்கமும், தனித்துவமான கால் தடங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சிவலிங்கம் மற்றும் அதனருகே இருந்த கால் தடங்களுக்கு மலர் அலங்காரம் செய்த மக்கள், சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடும் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தொல்லியல் துறையினர் அக்கோவிலில் முகாமிட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கோயில் ஒரு வினோதமான உலோகப் பொருளால் உருவாக்கபட்டதாக கூறும் உள்ளூர் வாசிகள், கோயிலில் உள்ள கருப்பு கற்களாலான சுவர்களில் இருந்து, மர்மமான முறையில் தண்ணீர் வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்ட இடம் பழைய மடாலயத்துக்கு சொந்தமானதாக இருக்கலாம் எனவும், இது 15-ம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலாக இருக்கலாம் எனவும் தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிவன் கோயில் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கியது முதல், ஏராளமான சிவ பக்தர்கள் கோயிலை நேரில் காணவும், வழிபாடு நடத்தவும் அப்பகுதிக்கு தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். குப்பை கிடங்காக இருந்த இடம் ஒரே நாளில் வழிபாட்டு தலமாக மாறியுள்ள சம்பவம், அப்பகுதியின் கலாச்சாரம் மற்றும் ஆன்மிக வரலாற்றை அனைவருக்கும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.