செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன? அண்ணாமலை கேள்வி!

12:20 PM Jan 08, 2025 IST | Murugesan M

குற்றவாளிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன?  என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது : "கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை அண்ணா நகரில், சிறுமி ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான போக்சோ வழக்கு தொடர்பாக, கடந்த 2024 செப்டம்பர் 7 அன்று, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம், சிறுமியின் பெற்றோரை காவல் ஆய்வாளர் தாக்கியதாகவும், அதிகாலை வரை, அவர்களை, காவல் நிலையத்தில் வைத்திருந்து துன்புறுத்தியதாகவும், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த 2024 ஆகஸ்ட் 30 அன்று பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கியக் குற்றவாளியான சதீஷ் என்ற நபர், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் வெளியிட்ட செய்திக்கேற்ப, தாமதமாகவே செப்டம்பர் 12, 2024 அன்றுதான் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த செய்திக்கு, மறுப்பு தெரிவித்த திமுக அரசு, கடந்த 13.09.2024 அன்று வெளியிட்ட செய்தி வெளியீட்டில், 14 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சிறுமியின் பெற்றோர்களைக் காவல் ஆய்வாளர் தாக்கியதாக வந்த செய்தி, விசாரணையில் பொய் என்று கண்டறியப்பட்டதாகவும் மறுப்பு வெளியிட்டது.

Advertisement

இந்த மறுப்பு வெளியீட்டில், 12.09.2024 அன்று கைது செய்யப்பட்ட சதீஷ் குறித்த விவரங்கள் எதுவுமில்லை. கைது செய்யப்பட்ட 14 வயது சிறுவன் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு விசாரணையும்,  உயர்நீதிமன்றத்தால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பெயரில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில், காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை முறையாக நடைபெறாமல், காலதாமதமாக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில், அண்ணா நகர் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரும், விசாரணைக்கு இடையூறாக இருந்த அதிமுக நிர்வாகி ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க அலட்சியமாகவும், வழக்கு விசாரணையைத் திசைதிருப்பும் போக்கிலும் செயல்பட்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்தில் வந்த செய்தி பொய் என்று செய்தி வெளியிட்ட திமுக அரசு, தற்போது என்ன பதில் கூறப் போகிறது? வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலேயே இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகவியலாளர் செல்வராஜ் அவர்களைப் பாராட்டாவிடினும், அவரை மிரட்டும் விதமாக, தொந்தரவு செய்து வருவது என்ன நியாயம்?

மேலும், சிறுமியின் பெற்றோர்களைக் காவல் ஆய்வாளர் தாக்கவில்லை என்று விசாரணை நடத்தித் தெரிவித்த அதிகாரி யார்? பொய் கூறிய அவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த வழக்கிலும், கடந்த 11.11.2024 அன்று திமுக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் குறித்த விவரங்களை வெளியிட்டு, பின்னர் அந்த செய்திக் குறிப்பை நீக்கியது.

அண்ணா நகர் சிறுமி, அண்ணா பல்கலைக்கழக மாணவி என, தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தி, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, எந்த எல்லைக்கும் செல்லத் திமுக அரசு தயாராக இருப்பதன் மர்மம் என்ன?"

Advertisement
Tags :
annamalaiannanagar child sexual assault caseDMK governmentFEATUREDMAINPOCSO caseSatishSpecial Investigation Team fstalintamil nadu bjp president
Advertisement
Next Article